முதல்வர் நேரில் அழைத்து சமரசம்
அமைச்சர் ஜெயக்குமாருக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால், அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அழைத்து சமரசம் செய்து வைத்தார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாகவும், சசிகலா தலைமையில் தனி அணியாகவும் செயல்பட்டனர். சசிகலா சிறைக்குப் போனபிறகு அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிமுகவில் மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டனர். அப்போது, ஓபிஎஸ் மற்றும் ஒரு சிலருக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டது.
இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுகவினருக்குள்ளேயே பல இடங்களில் மோதல் வெடித்தது. குறிப்பாக வடசென்னையில் கடந்த ஆகஸ்டு 26ம் தேதி மீனவர் சங்க கூட்டுறவு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்களுக்கும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் இடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. அதேபோன்று, திருவல்லிக்கேணி பகுதியிலும் தி.நகர் எம்எல்ஏ சத்யா ஆதரவாளர்களுக்கும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதி அதிமுக செயலாளர் வி.கே.பாபு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இது அதிமுக உட்கட்சி மோதலை பகிரங்கமாக வெளிப்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக அவைத்தலைவர் மசூதுதனன் நிருபர்களை சந்தித்து, அதிமுகவில் தனக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்க இருந்தார். இது அதிமுக உயர்மட்ட தலைவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியதால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசினர். உங்கள் ஆதரவாளரான மதுசூதனனை அழைத்து பேசி சமாதானப்படுத்துங்கள் என்று கூறினர். இதையடுத்து ஓபிஎஸ் மதுசூதனனை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து பேசினார். அப்போது, அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்னை பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியில் தெரிவிக்க வேண்டாம். முதல்வர் எடப்பாடியிடம் இதுபற்றி பேசியுள்ளேன்.
உங்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். அதுவரை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதுசூதனன், அமைச்சர் வேலுமணியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவரும், முதல்வர் சார்பில் தெரிவித்த சில கருத்துக்களை கூறி அமைதிப்படுத்தியுள்ளார். இதனால் மதுசூதனன் ஓரளவு சமாதானம் அடைந்தார். இந்நிலையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை முதல்வரும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அழைத்து பேசினார். இந்த சந்திப்பு முதல்வரின் இல்லத்தில் நடந்தது. அப்போது மதுசூதனன், அதிமுக கட்சியின் அவைத்தலைவராகவும், கட்சியின் மூத்த உறுப்பினராகவும் உள்ளேன்.
ஆனால் வடசென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வடசென்னை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட யாரும் எனக்கு மரியாதை தருவது இல்லை. கட்சியில் எனது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. கூட்டுறவு சங்க தேர்தலிலும் எனது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி கட்சி தலைமையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சரமாரி குற்றச்சாட்டுகளை கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
மதுசூதனனின் குற்றச்சாட்டுக்களை கேட்ட முதல்வர் எடப்பாடியும், அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசி நல்ல முடிவுகளை விரைவில் அறிவிப்பதாகவும், கட்சியில் நடக்கும் பிரச்னைகளை வெளியில் சொல்ல வேண்டாம் என்று சமரசம் செய்து வைத்தார். இதுவரை அதிமுக உள்கட்சி சண்டை மறைமுகமாகவே நடந்து வந்த நிலையில், தற்போது பகிரங்கமாக வெடித்து வெளியில் வந்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது.