நெட்ஃப்ளிக்ஸ் சந்தா கட்டணம் குறைப்பு! : கலக்கத்தில் சினிமா உலகம்
திரைப்படங்கள், டிவி சீரியல்கள், வெப் சிரீஸ் பார்ப்பதற்கான மாத கட்டணத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. இதன் மூலம் இனி வெறும் 199 ரூபாய்க்கு புதிய திரைப்படங்களை பார்க்கலாம்.
உலக அளவில் தற்போது ஸ்மார்ட்போன் ஆப் மூலம் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில், பல்வேறு மொபைல் ஆப்கள் இருந்தாலும், நெட்ஃபிலிக்ஸ் ஆப் மூலம் புதிய படங்களை மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது வாடிக்கை யாளர்களைக் கவரும் விதமக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சந்தா கட்டணத்தை வெகுவாக குறைக்க உள்ளது. இது வரையில் மாதம் ரூ.499, ரூ.649, ரூ.799 என்ற வகையில் பிளான்கள் இருந்தன.
நெட்ஃப்ளிக்ஸில் 499 ரூபாய் திட்டத்தில் ஒருவர் மட்டும் SD படம் பார்த்துக் கொள்ளலாம். 649 ரூபாய் திட்டத்தில் இரண்டு பேர் வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் HDயில் படம் பார்க்கலாம். இதே போல், 799 ரூபாய் திட்டத்தில் 4 பேர் வரையில், நெட்ஃப்ளிக்ஸ் உபயோகப்படுத்தலாம். இதில் Ultra HD சேவையும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
தற்போது நெட்ஃப்ளிக்ஸின் புதிய திட்டபடி, மாதம் 199 ரூபாய் செலுத்தினாலே போதும். உலகம் முழுவதிலும் உள்ள திரைப்படங்கள், வெப் சிரீஸ்களை பார்க்கலாம். இது பேசிக் பிளான் அடிப்படையில் வருகிறது. இதன் மூலம் நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் அதிகமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெட்ப்ளிக்ஸைப் பொறுத்தவரையில், புதிய தமிழ் படங்கள் திரைக்கு வந்ததும், சிறிது காலத்திற்குப் பிறகு தான் அப்லோடு செய்யப்படுகிறது. ஆனால், அமேசானில் உடனுக்குடன் பார்க்க முடிகிறது. மேலும், அமேசானில் ஒரு மாத சந்தா கட்டணம் வெறும் 129 ரூபாய் தான். ஒரு வருட சந்தா கட்டணம் 999 ரூபாய் தான்.
உலகளவில் மொபைல் பயன்பாட்டாளர்களில் இந்தியாவில் நடப்பாண்டில் 800 மில்லியன் பேர் இருப்பதாக ஈ மார்க்கெட்டர் தெரிவித்துள்ளது. இதுவே கடந்தாண்டு 581 மில்லியன் ஆக இருந்துள்ளது. இவர்களில் 33.4 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். இவர்கள் பெரும்பாலும் திரைப்படங்கள், செய்திகள், விளையாட்டுப் போட்டிகள், சீரியல் என அனைத்தையும் மொபைல் போனில் பார்க்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் மொபைல் போனில்தான் அன்றாட நிகழ்வுகளை அலுவலகம் மற்றும் பயணங்களில் பயன்படுத்துகின்றனர்.
அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் தற்போது இணையத்தில் புதிய புரட்சியை செய்து வருகிறது. இதனால் யாருக்கு என்ன லாபம், நஷ்டம் என்று பார்த்தால், பல வகையிலும் இரண்டும் இருக்கிறது. பயனீட்டாளர்கள் என்ற முறையில் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதுவே சினிமா துறைக்கு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பாதகமாக இருக்கிறது.
எப்படி என்று கேட்கலாம். ஒரு படம் பெரிய பட்ஜெட்டில் வெளியே வருகிறது. சாட்டிலைட் உரிமம், உள்நாட்டு உரிமம், வெளிநாட்டு உரிமம் என்று விற்று விடுகின்றனர். அமேசன் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் உடன் உடன்பாடு செய்து கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்ளலாம். தயாரிப்பாளர்கள் சொல்லும்போதுதான் நெட்பிளிக்ஸ் குறிப்பிட்ட அந்தப் படத்தை இணையத்தில் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, சந்தாதாரர்கள் அந்த ஒரு படத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்வது இல்லை. அனைத்து படங்களையும் பார்ப்பார்கள். அவர்களது சேகரிப்பில் இருக்கும் அனைத்து திரைப்படங்களையும், நிகழ்வுகளையும் பார்க்கலாம். அதாவது தற்போது நெட்பிளிக்ஸ் அறிமுகம் செய்து இருக்கும் திட்டத்தின் மூலம் ஒருவர் சந்தாரராக சேர்ந்து, அவர்களது கேலரியில் இருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கலாம். பின்னர் அதற்கு அடிமையாகி விடுவார்கள். அதுவே பிடித்துப் போகும். பிரைம் இணைப்பில் அதிக பணம் செலுத்தி, குடும்பத்தில் நான்கு பேர் வேண்டுமானாலும், வெவ்வேறு இணைப்புகளில் பார்த்துக் கொள்ளலாம். இதுபோன்ற வசதிகள் இருப்பதாலும், தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்ப்பது குறைந்து வருகிறது. வெறித்தனமான ரசிகர்கள் மட்டுமே தியேட்டருக்கு சென்று பார்க்கின்றனர். பெரும்பாலும், தொலைக்காட்சியில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அணுகுமுறை இருக்கிறது. இதனால் தான் திரைக்கு வந்த சில நாட்களிலேயே படங்கள் வெளியேறி விடுகிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திற்குப் பின்னரும் திரைப்படங்கள் 200 முதல் 250 நாட்கள் என்று திரையில் ஓடி இருக்கின்றன. ஆனால் இன்று சாத்தியமில்லை.
இன்று தியேட்டர்களிலும் குடும்பத்துடன் நான்கு பேர் சென்று சினிமா பார்க்க முடிவதில்லை. குறைந்தது 2000 ரூபாய் வேண்டும். அதுவும் ஒரு குடும்பத்திற்கு சுமையாக அமைந்து விடுகிறது. அதனால் தியேட்டர் செல்வதைத் தவிர்த்து இணையதளங்களில் எளிதாக டவுன்லோடு செய்து பார்த்து விடுகின்றனர். இதைத்தான் நெட்பிளிக்சும் அளிக்கிறது. இதனால், மெதுவாக பாதிக்கப்படுவது சினிமா மற்றும் பொழுதுபோக்குகளை வழங்கும் தொலைக்காட்சிகள்தான்.
தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகும் காட்சிக்காக காத்திருக்க வேண்டியது இல்லை. அதற்கு முன்னதாகவே அன்று இரவு சீரியலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வசதியாக ஆப்புகள் வந்துவிட்டன. குறிப்பிட்ட ஆப் நிறுவனத்திற்கு சந்தா செலுத்திவிட்டால், முன்னதாகவே சீரியலில் அடுத்தது என்ன நடக்கவிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதுபோன்று எதிர்காலத்தில் சிறிய பட்ஜெட்டில், சிறிய படங்களும் எடுக்கப்பட்டு, நெட்பிளிக்சில் வரலாம். பணம் கட்டி அந்தப் படத்தை இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். இதனால், எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை தளர்த்தி, பட்ஜெட்டை குறைக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம். வேகமாக மாறிவரும் இணைய உலகில் அனைத்துக்கும் சாத்தியமே.