100 ஏக்கர் நிலம் கேட்ட செங்கோட்டையன் கொதிக்கும் கொங்கு ஈஸ்வரன்
சமீபத்தில் விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதனைத்தொடர்ந்து, சுதந்திர தின விழாவில் சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து இப்படி புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வரும் சூழலில், பலரும் தங்களுடைய மாவட்டங்களையும் நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்மென்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
அந்தவகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரான ஈ.ஆர்.ஈஸ்வரன், ‘கோவை மாவட்டத்தைப் பிரித்து பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தையும், ஈரோடு மாவட்டத்தைப் பிரித்து கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
ஈஸ்வரனின் இந்த கோரிக்கை குறித்து, ஈரோட்டில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘கோபிசெட்டிபாளையத்தில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்தால், புதிய மாவட்டத்தை உருவாக்க நான் கோரிக்கை வைக்கிறேன்’ என பதிலளித்தார். அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பதில் கொங்கு ஈஸ்வரனை கொதிக்க வைத்திருக்கிறது.
அமைச்சர் செங்கோட்டையனின் இந்த கருத்திற்கு காட்டமான அறிக்கை ஒன்றை கொங்கு ஈஸ்வரன் கொடுத்திருக்கிறார். அதில், “கோபிச்செட்டிப்பாளையத்தில் ஈஸ்வரன் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபியை தனி மாவட்டமாக்குவதற்கு நான் கோரிக்கை வைக்கிறேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்திருக்கிறார். இதிலிருந்து கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களை பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையே அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வைக்காமல் இருப்பது தெரிய வருகிறது. கோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சித்திட்டங்களை வேகப்படுத்த முடியும். அந்தந்த மாவட்டத்தில் மூடப்பட்டு கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை காப்பாற்றி வேலை இழப்புகளையும் தவிர்க்க முடியும். கோபியை தனி மாவட்டமாக பிரித்தால் கோபியை சுற்றி இருக்கின்ற மக்கள் வளர்ச்சி பெறலாம் என்ற ஆர்வத்தோடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த பகுதி மக்களுடைய கோரிக்கையை தான் நான் தமிழக அரசுக்கு தெரிவித்தேன்.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை பிரித்து கொண்டிருக்கிறார்களே அங்கெல்லாம் 100 ஏக்கர் நிலம் பெற்றுக்கொண்டு தான் பிரித்தார்களா?. இப்போது வேலூரை மூன்றாக பிரித்தார்களே அங்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 ஏக்கர் கொடுத்த மூன்று தர்ம பிரபுகள் யாரென்று அமைச்சர் சொல்ல முடியுமா? ஒரு மாவட்டம் பிரிப்பதற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கும் 100 ஏக்கர் நிலம் எதற்கு என்று எனக்கு புரியவில்லை. அதற்கான விளக்கத்தை அமைச்சரிடம் எதிர்பார்க்கிறேன்.
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் நிலம் கொடுக்கவில்லை என்று சொன்னால் திட்டத்தை கைவிட்டுவிடலாமே. எரிவாயு குழாய் பதிக்கின்ற திட்டத்திற்கும், உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கின்ற திட்டத்திற்கும் நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளை காவல்துறையை வைத்து மிரட்டுவது ஏன்? நிலங்களை கையில் வைத்துக்கொண்டு அல்லவா அந்த திட்டங்களை அறிவித்திருக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.