அதிகாரம் இல்லாத அதிகாரியிடம் பேச்சுவார்த்தையா ? பொதுமக்கள் கொந்தளிப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள செட்டிபாளையம் சாலை. பல்லடம், கொச்சின் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனிடையே செட்டிபாளையம் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆகிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் குடியிருப்புக்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பார் வசதி இல்லாததால் மது வாங்குபவர்கள் சாலையிலேயே மதுவை குடித்துவிட்டு அலங்கோலமாக படுத்துக்கிடப்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு கட்டமாக டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாய் தலையணையுடன் வந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டாஸ்மாக் மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருகட்டத்தில் பொதுமக்கள் கேள்விகளால் துளைத்தெடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதில் சொல்லமுடியாமல் மேலாளர் திணறினார்.
பின்னர் பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்க தனக்கு அதிகாரமில்லை என அடிக்கடி பதில் தெரிவித்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து, அதிகாரமில்லாத அதிகாரியிடம் பேச்சுவார்த்தை எதற்காக நடத்த வேண்டும் என கொந்தளித்தனர்.