தமிழகம்

ஏசி வெடித்த விசாரணையில் திருப்பம் : மகனே பெற்றோரை கொன்று நாடகமாடியது அம்பலம் –

திண்டிவனம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜி (60). வெல்டிங் பட்டறை உரிமையாளரான இவருடைய மனைவி கலைச்செல்வி (52). இவர்களுடைய மகன்கள் கோவர்தனன் (30), கௌதம் (27). கலைச்செல்வியும், கௌதமும் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர்.
இதனிடையே கோவர்தனனுக்கும், செஞ்சி அருகாமை கிராமத்தைச் சேர்ந்த தீபகாயத்ரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு கோவர்தனனும், தீபகாயத்ரியும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், ராஜி தனது மனைவி மற்றும் 2-வது மகனுடன் மற்றொரு அறையிலும் படுத்துத் தூங்கினர். மறுநாள் அதிகாலையில் கலைச்செல்வியும், கவுதமும் அறையில் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
ராஜி, வீட்டின் முன்பக்கப் பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீஸார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் ஸ்பிளிட் ஏசியின் இன்னர் தீயில் கருகிய நிலையிலும், கட்டில், மெத்தைகள் மற்றும் பொருட்கள் எரிந்து கிடந்தன. இது தொடர்பாக கோவர்தனன் போலீஸாரிடம் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. எந்திரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யவில்லை எனவும், இதனால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி.எந்திரம் வெடித்து தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறினார்.


ஆனால் ஏ.சி. எந்திரம் வெடித்ததாக கூறப்பட்ட அறையில் கிடந்த 2 மண்ணென்ணெய் கேன், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ஏ.சி.எந்திரம் வெடித்திருந்தால் முதலில் வெளியே உள்ள அவுட்டோர் யூனிட் முற்றிலுமாக சேதமாகி இருக்கும். ஆனால் இங்கு அப்படி இல்லை. ஏ.சி.எந்திரத்தின் இன்டோர் மட்டுமே எரிந்த நிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸார் சம்பந்தப்பட்ட ஏசி நிறுவனத்திடம் தங்களின் சந்தேகத்தை மின்னஞ்சல் மூலம் கேட்டனர். ஏசி வெடிக்க வாய்ப்பே இல்லை என்று பதில் வந்தது. மேலும் திண்டிவனம் மின்வாரியத்திடம் விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நேரத்தில் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டதா என கேட்டு, அப்படி ஏதுவும் நடக்கவில்லை என மின்வாரியம் பதில் அளித்தது.
இதற்கிடையே கலைச்செல்வியின் சகோதரரான கேணிப்பட்டைச் சேர்ந்த ஜெயசங்கர் திண்டிவனம் போலீஸில் புகார் அளித்தார். அப்புகாரில் , ‘’ஏ.சி. எந்திரம் வெடித்ததால் எனது சகோதரி உட்பட 3 பேர் இறந்ததாக தகவல் வந்ததும் விரைந்து சென்று பார்த்தேன். அப்போது ராஜி மற்றும் கௌதமின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தன. ஏ.சி.எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டால் வெட்டுக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. 3 பேரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு தீ வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. ஏற்கெனவே குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது. ராஜியின் மூத்த மகனான கோவர்த்தனன் மற்றும் சில உறவினர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும்‘’ என்றார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் கோவர்தனனிடம் தங்கள் விசாரணையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் திண்டிவனத்தில் எஸ்பி ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘’கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது இது திட்டமிட்ட கொலை என்று தெரியவருகிறது. கோவர்தனன் 3 பேரை திட்டமிட்டுக் கொன்றதையும், தன் மனைவி தீபா காயத்ரி அதற்கு உடந்தையாக இருந்ததையும் ஒப்புகொண்டுள்ளார். கோவர்தனன் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை கிடைக்காமல், தனியாக ட்யூஷன் சென்டர் நடத்தியுள்ளார். அதிலும் போதிய வருமானம் இல்லாததால் வாடகைக்கு 2 கார்களை விடும் தொழில் செய்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மிக எளிமையான முறையில் கோவர்தனன் திருமணம் நடந்துள்ளது.
மேலும் குடும்பத்தினர் கௌதமிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, வருகின்ற 6-ம் தேதி நடைபெற உள்ள கௌதமின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இது கோவர்தனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திட்டமிட்டு 3 மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி வாய்ப்பகுதியை காற்று புகாதவாறு தன் அறையில் பாதுகாத்து வைத்துள்ளார். 14-ம் தேதி இரவு ராஜி, கலைச்செல்வி, கௌதம் ஆகியோர் ஒரே அறையில் 3 பேரும் தூங்கச் சென்றனர். 15-ம் தேதி அதிகாலை அறைக்குள் ஒரு மது பாட்டிலை தீவைத்து வீசியும், 2 மது பாட்டில்களை ஹாலில் தீ வைத்தும் வீசியுள்ளார். முன்பக்க கதவுகளையும் மூடியுள்ளார். அறையின் பின்பக்க கதவு வழியாக வெளியே ஓடிவந்து கூக்குரலிட்ட ராஜியை கோவர்தனன் சரமாரியாக கத்தியால் வெட்டிக் கொன்றுள்ளார். அவரிடமிருந்து கத்தி, மது பாட்டில்களின் உடைந்த பகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. இதையறிந்த தீபா காயத்ரி தடுக்க முயன்றபோது அவரை மிரட்டி தங்கள் அறையில் வைத்துப் பூட்டியுள்ளார்’’.
இவ்வாறு எஸ்பி ஜெயகுமார் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button