தமிழகம்

குடி மராமத்து பணியும் மணல் கடத்தலும்..!: நடவடிக்கை எடுப்பார்களா?

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரியை பெரும் குழியாக்கி, வருவாய்துறை அதிகாரிகளின் துணையுடன் செம்மண் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை பராமரிப்பதற்காக கரைகளை பலப்படுத்தி மேம்படுத்தவும், 3 அடி ஆழத்திற்கு ஆழப்படுத்தவும் தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்பட்டு வருகிறது. அதன் பேரில் ஏரி,குளங்களில் அள்ளப்படும் வண்டல் மண்ணை, அனைத்து விவசாயிகளும் இலவசமாக எடுத்து கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது.


இதில் சில கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அரசு அமல்படுத்தியுள்ளது. ஏரியின் கரை ஓரத்தில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் தான் மண் எடுக்க வேண்டும், அதே போல மூன்று அடி ஆழம் மட்டுமே தோண்ட வேண்டும், அவ்வாறு எடுக்கப்படும் மண்ணை, பஞ்சாயத்து ஏரி என்றால் சம்பந்தப்பட்ட வருவாய் அலுவரிடம் அனுமதி பெற்று, பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் அளந்து வழங்கப்பட வேண்டும். அதே போல் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியாக இருந்தால், பொதுப்பணி துறை அதிகாரிகள் நேரில் சென்று அளந்து கொடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் மண்ணை, டிராக்டர் கொண்டு மட்டுமே எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வடமருதூர் ஏரியில் வண்டல் மண் எடுப்பதாக கூறி, விதியை மீறி கிட்டத்தட்ட 50 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டி செம்மணை எடுத்து விற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட டிராக்டரில் சுழற்சி முறையில் செம்மண் எடுக்கப்படுவது தெரிய வந்தது.
அளவிற்கு அதிகமாக குழி தோண்டி செம்மண் எடுத்து உள்ளதால் மழை பொழிந்து அதில் நீர் தேங்கும் போது, அது உயிரிழப்புக்கு வழிவகை செய்யும் வகையில் உள்ளது என்றும், பொய்யாக வண்டல் மண் எடுப்பதாக கூறி ஏரியில் உள்ள செம்மண்ணை எடுத்து தற்போது நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்தில் சென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது, அவர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுக் கூறுவதாக கூறினார். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, தான் புதிதாக வந்த அலுவலர் என்பதால் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய நிலையில், அங்கிருந்த ஜேசிபி ஓட்டுனர் விதியை மீறி மண் அள்ளுவதை ஒப்புக் கொண்டார்
எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
இதைப்போலவே ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒரு லாரிக்கு வழங்கப்பட்ட கனிம வளத்துறையின் ஒரு அனுமதி சீட்டில் மேஜிக் பேனாவைப் பயன்படுத்தி போலியாக எழுதி பல லாரிகளில் கல் மற்றும் மணல் கடத்தல் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சென்னிமலை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல கல் குவாரி உரிமையாளர்கள், கனிம அனுப்புகைச் சீட்டில் மேஜிக் பேனாவால் எழுதி மோசடி செய்து, ஒரே கனிம அனுப்புகைச் சீட்டு மூலம் ஏராளமான லாரிகளில் கனிமங்களைக் கடத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த மோசடி நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தற்போது தான் அம்பலம் ஆகி உள்ளது.
கல் குவாரிகளில் உடைத்து எடுக்கப்படும், ஜல்லிக் கற்கள், ரஃப் கல், மேடை மண், சரளை மண், எம்.சாண்ட் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு செல்ல கனிம வளத்துறை அதிகாரிகளிடம் உரிய வரி செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்வது வழக்கம்.
அந்த அனுமதி சீட்டு கனிமங்களை கொண்டு செல்லும் லாரிகளில் வைத்திருக்கவேண்டும். ஒவ்வொறு முறை லாரிகளில் கனிமம் கொண்டு செல்லும் போதும், குவாரியில் இருந்து கனிமங்கள் கொண்டு செல்லும் தேதி, நேரம், டிரைவர் பெயர், மற்றும் உத்தேச தூரம் குறிப்பிட்டு குவாரி உரிமையாளர் கையெப்பம் இட்டு இந்த அனுப்புகை சீட்டு எடுத்து செல்ல வேண்டும் என்பது விதி.
இந்த சீட்டில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அதிகாரிகளில் முத்திரை மற்றும் கையொப்பம், அரசின் ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும், இதில் ஒரு லோடு கொண்டு செல்ல ஒரு ஒப்புகை சீட்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் கனிமம் கொண்டு செல்லும் போது துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்யும் போது இதனை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும்.
இந்த அனுமதி சீட்டு இல்லை எனில் லாரியினை பறிமுதல் செய்யவும், ஓட்டுநரைக் கைது செய்யவும் சட்டத்தில் வழிமுறை உள்ளது. தற்போது தீயில் வாட்டினால் எழுத்துக்கள் மறையும் தன்மை கொண்ட மேஜிக் பேனாவால் இந்த அனுமதி சீட்டில் விவரங்களை குறிப்பிட்டு பெரிய அளவு மோசடி நடந்து வருவதாக கூறப்படுகின்றது.


சென்னிமலை மற்றும் பெருந்துறை பகுதியில் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் ஒரு அனுப்புகை சீட்டினை வைத்து பல லாரிகளில் பல லோடு கனிமங்களை சட்டத்திற்கு புறம்பாக கடத்தி விற்பனை செய்கின்றனர் என்றும், இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதை கனிம வளத்துறை உதவி இயக்குனர்களுக்கு கூட தெரியாமல், குவாரி உரிமையாளர்கள் பல லட்சங்களை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். துறை அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இனியாவது கனிம வளத்துறை அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button