விதிகளை மீறும் ஓட்டுநர்கள் தொடரும் உயிரிழப்புகள்..! : காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
பொள்ளாச்சி அருகே வளைவில் அதிவேகமாக வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற சரக்கு வாகன ஓட்டுனரின் அவசர புத்தியால், ஆம்னி வேன் மீது மோதி 3 பேர் பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் மீது செலுத்தும் அதே கவனத்தை, சாலைவிதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடமும் காவல்துறையினர் காட்டுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உடுமலைப்பேட்டை சிவசக்தி காலனியில் இருந்து கோவைக்குச் சென்ற ஆம்னி கார் மீது, பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி சுங்கம் அருகே வளைவான பகுதியில் பெரியகுளம் நோக்கிச்சென்ற சரக்கு வாகனம் அதிவேகத்தில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக பலியாயினர்..!
ஆம்னி வேன் ஓட்டுனர் வேலுச்சாமி, சம்பத்குமார்,பேபிகமலம், ஆகியோர் பலியான நிலையில், சரக்கு வாகன ஓட்டுனர் ஆனந்த், காரில் வந்த ஜோதிமணி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தினர் காவல்துறையினர் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
விதியை மீறி வளைவில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல வேண்டும் என்ற சரக்கு வாகன ஓட்டுனரின் அவசர புத்தியால் இந்த கோர விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் சாலையை விட்டு வெளியே சென்று விட்டது. ஆம்னி வேன் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுங்கி திசை மாறி நின்றது. இதுபோன்ற வளைவுகளில் முறையான அறிவிப்புப் பலகை வைத்திருக்க வேண்டும், வாகன ஓட்டிகளும் வளைவுகளில் அதிவேகத்தில் திரும்புவதையும் முன்னால் செல்கின்ற வாகனங்களை முந்திச் செல்ல முயல்வதையும் தவிர்க்க வேண்டும்.
தலைக்கு ஹெல்மெட் அணிவது பாதுகாப்பானது என்று இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் காவல்துறையினர், ஆம்னி வேன் போன்ற வாகனங்களை எப்படி அனுமதிக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இல்லாத இந்த வாகனங்கள், விபத்தில் சிக்கினால் உயிர்ப் பலி நிச்சயம் என்ற நிலையில், இதனை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதாகவே கருதப்படுகிறது.
கிராமப்புறங்களில் ஆம்னி வேன்களின் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில், இதுபோன்ற பாதுகாப்பற்ற வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துமாறு அறிவுறுத்துவது அவசியமாகிறது. சரக்கு வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்த வேண்டும் என்ற விதி முறையாக கடைபிடிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு வேகத்தில் வாகனத்தை வளைவில் இயக்கி இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதேபோல் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷேர் ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் அமர்த்தி அழைத்துச் செல்லப்பட்ட 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆம்பூர் மல்லிகைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரது மகள் திவ்யகரசி, நாகேஸ்வரன் கோவில் பகுதியிலுள்ள இந்து ஆரம்பப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். திவ்யகரசியும் அவரது சகோதரன் லோகேஷ்வரனும் கார்த்திக் என்பவனது ஷேர் ஆட்டோவில் மற்ற குழந்தைகளோடு பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
காலை 15 குழந்தைகளை தனது ஆட்டோவில் திணித்துக்கொண்ட கார்த்திக், திவ்யகரசியை ஓட்டுநர் இருக்கையின் ஒரு ஓரத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளான். பள்ளி செல்லும் வழியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் ஆட்டோ ஏறி இறங்கி ஆடி அசைந்து சென்றிருக்கிறது. அவ்வாறு செல்லும்போது ஓட்டுநர் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்த குழந்தை திவ்யகரசி, பிடிமானத்தை இழந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த குழந்தை, மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் குழந்தையின் சடலத்தைப் பார்த்து அவரது பெற்றோர் கதறிய காட்சி காண்போரை வேதனையில் ஆழ்த்தியது.
விதிமுறைகளை மீறி ஆட்டோவில் அதிக குழந்தைகளை அழைத்துச் சென்று சிறுமியின் இறப்புக்குக் காரணமான ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் கைது செய்யப்பட்டான்.
ஆட்டோவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை அதிலும் குறிப்பாக குழந்தைகளை ஏற்றக்கூடாது என எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும் பேராசை பிடித்த சிலர் அதனை மதிப்பதோ, கடைபிடிப்பதோ இல்லை. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் உறுப்புகளை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுபோன்ற ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் அவர்களை கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரும் அவர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்பதை கண்காணிக்கவில்லை என்றால் இது போன்ற பேரிழப்புகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாகியுள்ளது. எனவே குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் குழந்தைகளை ஏற்றிக்கொண்ட ஆட்டோவில் மேற்கொண்டு தங்கள் குழந்தைகளை ஏற்றி அனுப்புவதை பெற்றோரும் தவிர்க்க வேண்டும்..
வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்கும் போது விரைவாக செல்ல வேண்டும் என்று எண்ணாமல் பயணிக்க பாதுகாப்பாக வேண்டும் என்று சிந்தித்தாலே பாதி விபத்துக்கள் குறைந்து விடும். அதே நேரத்தில் பந்தய சாலை என நினைத்து வாகனத்தை அதிவேகத்தில் இயக்கி விபத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க, போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!