தமிழ்மொழியைவிட சமஸ்கிருதம் பழமையானதா..? : பாடப்புத்தகத்தால் சர்ச்சை
பிளஸ் டூ ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என்பது போல, அதன் தொன்மையான ஆண்டு குறிப்பிடப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ ஆங்கிலப் பாடப்புத்தகம் 10 ஆண்டுகளுக்கு பின்பு இந்த ஆண்டு புதிதாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 142 ம் பக்கத்தில் தொன்மையான மொழிகள் பற்றிய பாடத்தில், தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என குறிப்பிடப்பட்டு உள்ளது.
உலகின் தொன்மையான மொழிகள் பட்டியலில், சைனீஸ், ஹீப்ரோ, லத்தீன், தமிழ், கிரேக், சம்ஸ்கிருதம், அரபிக் என்று வரிசைப்படுத்தி, நான்காவதாக தமிழ் இடம்பெற்றுள்ள போதிலும், மொழிகளின் தொன்மையான ஆண்டு பற்றி குறிப்பிடும் போது, தமிழ் கிமு 300 ஆண்டுகள் பழமையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டுகள் என்றும் அச்சிடப்பட்டு உள்ளது.
இதன்மூலம், தமிழ் மொழி 2,300 ஆண்டுகள் பழமையானது போலவும், சமஸ்கிருதமோ 4,000 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளதாகவும், தமிழ் மொழியே உலகின் மூத்த மொழி என தமிழ் அறிஞர்கள் கூறிவரும் நிலையில், சமஸ்கிருதத்துக்கு பின்பே தமிழ் தோன்றியது போல் இளைய தலைமுறையினர் மத்தியில் பரப்பப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக ட்வீட் போட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால், சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம்.
காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு ஆங்கில நூலில் தமிழை விட தொன்மையான மொழி சமஸ்கிருதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு ஆகும். தமிழ் செம்மொழி தொடர்பான அந்தப் பாடத்தில் தேவையற்ற இந்தத் தகவல் திணிக்கப்பட்டிருப்பது ஏன்?
தமிழின் தொன்மையை சந்தேகிக்கும் வகையில் பாடநூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அடங்கிய வினா நீக்கப் பட வேண்டும். இதன் பின்னணியில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள் 3 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து 13 ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். பள்ளிப் பாடங்களில் சமஸ்கிருத மொழியை புகுத்துவது, இந்தி மொழியை கற்க வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது தமிழின் தொன்மை குறித்து பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற பாடப் பகுதி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை தயாரித்து வந்தது. அதன்படி கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது. பாடத்திட்டம் தயாரிக்கும் பணி முழுவதும் மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தான் செய்கிறது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் தயாரித்து கொடுக்கும் பாடப்பகுதிகளைதான் தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்குகிறது.
இதன்படி கடந்த ஆண்டு அச்சிட்டு வினியோகம் செய்த புத்தகங்களில், தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தினர் தொடர்பாக இடம் பெற்ற கருத்துக்கு எதிர்ப்பு வந்த நிலையில் அவற்றை தமிழக அரசு நீக்கியது. இந்த பிரச்னை ஓய்ந்த நிலையில், தேசிய கீதத்தை தவறாக அச்சிட்ட பிரச்னை பூதாகரமானது. அதை திருத்தி அச்சிட்டு வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிளஸ் 2 ஆங்கில பாடப்புத்தகத்தில் பக்கம் 142ல் செம்மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில்(யூனிட் 5) ஒரு பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது. கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்பவர் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருளடக்கத்தை அந்த பகுதியில் அச்சிட்டுள்ளனர். பயிற்சிப் பகுதியான அதில் கோடிட்ட இடங்களை நிரப்பும் விதமாக அந்த பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பண்டைய மொழிகள் குறித்த காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சீன மொழி கிமு 1250, ஹீப்ரு மொழி கிமு 1000, தமிழ் மொழி கிமு 300, கிரேக்க மொழி கிமு1500, சமஸ்கிருதம் கிமு 2000, லத்தீன் கிமு 75, அரபு மொழி கிபி512 என்று குறிப்பிட்டு, அந்த மொழிகளை வரிசைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த பக்கத்தில் அந்த மொழிகளின் சிறப்புகள் குறித்து ஜார்ஜ் எல் ஹார்ட்டின் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பாடப் பகுதியில் தமிழ் மொழியின் தொன்மை கிமு 300 என்று அச்சிட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து ஊடகங்கள் பெரிய அளவில் செய்தி வெளியிட்டன. இதற்கு அரசியல் தலைவர்கள், பொது நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் விழிப்படைந்த பள்ளிக் கல்வித்துறை தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பிளஸ் 2 ஆங்கிலப் பாடம் எழுதிய ஆசிரியர்கள் குறித்த தகவல்களை பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது. அதில் ஆங்கிலப் பாடப்புத்தகத்தை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் செயல்துறை தலைவராக ஓய்வு பெற்ற தனியார் பள்ளியின் முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார். பாடங்களை மறு ஆய்வு செய்யும் குழுவில் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளராக அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் மூத்த விரிவுரையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் மேற்பார்வையில் 9 ஆசிரியர்கள் பாடங்களை எழுதியுள்ளனர். இவர்களில் 3 பேர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மீதம் உள்ளவர்கள் அனைவரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர தொழில் நுட்ப பணியில் ஈடுபட்டவர்கள் 8 பேர் இந்த குழுவில் உள்ளனர். இந்நிலையில் தமிழின் தொன்மை குறித்து எழுதிய பாடத்தில் ஏற்பட்டுள்ள பிழையை அடுத்து மேற்கண்ட குழுவின் முக்கிய பொறுப்பில் உள்ள 13 பேருக்கு பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதன்படி 3 நாளில் அதற்கு உரிய விளக்கத்தை மேற்கண்ட இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து உரிய திருத்தம் செய்யும் வரையில் மேற்கண்ட சர்ச்சைக்குரிய பாடப்பகுதியை பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட மாட்டாது. அந்த பகுதி முழுவதும் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மேற்கண்ட 13 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
& கோடங்கி