மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள்… : தீர்வு காணுமா அரசு ?
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் இருக்கிறது சிப்காட் தொழிற்பேட்டை வளாகம். தெற்கு ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தொழில்பேட்டையாக இது கருதப்படுகிறது. 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிப்காட் வளாகத்தில் 250-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. குறிப்பாக தோல் தொழிற்சாலைகள், சாயத் தொழிற்சாலைகள் இந்தப் பகுதியில் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேறியது என்பதுதான் இந்தப் பகுதி மக்களின் போராட்டத்திற்கு காரணமாக இருக்கிறது.
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள் பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து பிரித்து எடுக்கப்படும் திடக்கழிவுகள் பல ஆயிரம் டன் பூமியிலேயே புதைக்கப்படுகிறது. குறிப்பாக இங்கு இருக்கக்கூடிய ஏரிகள், குளங்கள், பயன்படுத்தப்படாத கிணறுகளில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக மழை பொழியும் பொழுது திடக்கழிவில் உள்ள ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலக்கிறது.
இதே போன்று பல ஆலைகளில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஆழ்துளை கிணறுகளின் வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது. இதனால் சிப்காட்டை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் நிறம் சிவப்பு நிறத்தில் உள்ளது. கால்நடைகளுக்கும், குடிப்பதற்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் 500 டிடிஎஸ் அளவிற்கு மாசு இருக்கலாம் என்ற ஒரு வரையறை உள்ளது. ஆனால் இங்குள்ள தண்ணீரில் அதிகபட்சமாக 2000 டிடிஎஸ் வரை இருக்கிறது. எனவே இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மிகப் பெரிய கொடிய நோயான கேன்சர் உட்பட பல வியாதிகளுக்கு இப்பகுதி மக்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.
இதனால் இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் இருப்பிடம், விவசாய நிலங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்புபடி சாய, தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சுத்திகரித்து மீண்டும் அந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவும் அமைத்துள்ளது.
இது ஒரு புறமிருக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு குளிர்பான கம்பெனியான கொக்கோ கோலாவுக்கு பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் நிலம் வழங்கியதை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக வேறு வழியின்றி அரசு வழங்கிய நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு சிப்காட்டில் இருந்து வெளியேறியது கோலா கம்பெனி. இப்போது பொடாரன் என்கிற குளிர்பான கம்பெனிக்கும், மிகப் பிரபலமான சக்தி மசாலா நிறுவனத்திற்கும் பெருந்துறை சிப்காட்டில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் யாருக்கும் தெரியாமல் பொடாரன் குளிர்பான கம்பெனி புதிதாக கட்டுமானப் பணியை துவக்கி உள்ளது. இதனால் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியிருக்கும் பொதுமக்களும், பெருந்துறை மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பொடாரன் கம்பெனியும், சக்தி மசாலா கம்பெனியும் சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என ஈரோடு ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
பொடாரன் குளிர்பான கம்பெனி வெளிநாட்டு கம்பெனி இல்லை. பெருந்துறைக்கு அருகிலுள்ள காங்கேயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூரிலும், ஆந்திர மாநிலத்திலும் கிளைகள் உள்ளன. தங்கள் குளிர்பான கம்பெனியை வெளிநாட்டு குளிர்பானங்களை போல் தரம் உயர்த்தி தொழிலை மேம்படுத்த பொடாரன் நிறுவனத்தினர் முயற்சி எடுத்துள்ளனர். குளிர்பான கம்பெனி என்றால் அடிப்படை மூலக்கூறாக சொல்லப்படுவது தண்ணீர். ஈரோடு அருகேயுள்ள பெருமாள் மலை காவிரி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு குடிநீர் தினமும் தடையின்றி போகிறது. இந்த குடிநீர் திட்டத்தின் குழாய்கள் பெருந்துறை சிப்காட் வழியாக போவதால் அந்த குழாயிலிருந்து சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஏற்கனவே தண்ணீர் எடுக்கப்படுகிறது. பொடாரனுக்கும் பெருந்துறை சிப்காட் தண்ணீர் மேல் ஆசை வந்து விட்டது. எனவே சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் சிறப்பு பொருளாதார மண்டலம் பகுதியில் பொடாரன் குளிர்பான கம்பெனிக்கு 10.6 ஏக்கர் நிலமும், ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா கம்பெனிக்கு 23 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது.
பொடாரன் கம்பெனிக்கு சிப்காட் வழியாக செல்லும் தண்ணீர் குழாயில் எல்அண்ட்டி கம்பெனி மூலம் நாளொன்றுக்கு 50000 லிட்டர் தண்ணீர் வழங்க அவர்களுக்குள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பொறியியல் சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால் பொறியியல் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் தான் அங்கு செயல்பட வேண்டும். ஆனால் பொறியியல் பொருளாதாரம் என்பதில் சில விதிகளை திருத்தி உணவு உற்பத்தி பொருளாதார மண்டலம் என்று மாற்றியுள்ளனர் சிப்காட் தொழிற்பேட்டை அதிகாரிகள். அப்போதுதான் குளிர்பானமும், மசாலாவும் உணவுப்பொருட்கள் என்கின்ற தகுதியோடு அங்கு தொழில் செய்ய முடியும்.
கடந்த 27.06.2019 அன்று பெருந்துறை சிப்காட் மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வுக்கூட்டம் ஈரோடு கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் பெருந்துறையில் நடந்தது. அப்போது பொடாரன், சக்தி மசாலா கம்பெனிகளின் பிரச்சினை வெடித்தது. இந்த தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் வைத்தார்கள். அதனடிப்படையில் 01.07.2019 அன்று ஈரோடு கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பங்கேற்று தொழிற்சாலைகளுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெற வேண்டும் எனவும், கட்டுமானப் பணிகளை நிறுத்த உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதனை ஏற்று குளிர்பான கம்பெனியின் கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். துவக்க நிலையிலேயே மக்களின் எதிர்ப்பை புரிந்துகொண்ட சக்தி மசாலா நிறுவனம் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் தொழிற்சாலைக்கு பதிலாக குளிர்பான கிடங்காக மாற்றிக் கொள்கிறோம் என்று கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளது.
பொடாரன் கம்பெனியின் நிலை என்னவென்று தெரியவில்லை. அடுத்தடுத்த நடவடிக்கையின் போது தான் அது வெளிச்சத்திற்கு வரும். எது எப்படி இருந்தாலும் நிலத்தடி நீர் மாசுபட்டு உள்ள சூழ்நிலையில் கூட்டு குடிநீர் திட்டத்தின் தண்ணீரையும் பெற்று மேலும் ஒரு தொழிற்சாலை உருவாகி அதன் மூலமாக வரும் கழிவுநீர் இயற்கையை முற்றிலுமாக பாதிக்கப்படுவதற்கு எதிராக போராடும் போராட்ட குழுவிற்கும் பொது மக்களுக்கும் ஆதரவாக அரசு செயல்பட வேண்டும் என்பது அனைவரின் ஆவா…
– N.G.செந்தில்குமார்