டிக்-டாக்கில் திருமணமான பெண்ணுடன் காதல் : காதல் ஜோடி தற்கொலை முயற்சி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த இலந்தை குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். டிக் டாக் செயலில் பல்வேறு நடிகர்கள் போன்று குரல்களை மாற்றிப் பேசுவது, பாடல்களுக்கு வாய் அசைப்பது போன்ற செயல்களில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இதே போன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் இதே வழக்கத்தை பொழுதுபோக்காக வைத்துள்ளார். டிக் டாக் செயலி மூலம் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. புஷ்பராஜ், சங்கீதாவை அழைத்துக் கொண்டு பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு சென்றுள்ளார்.
இதனிடையே சங்கீதாவுக்கு ஏற்கனவே லாரி ஓட்டுநருடன் திருமணமாகி இருவருக்கும் ஒரு குழந்தை இருப்பதும் புஷ்பராஜ்க்கு தெரிய வந்துள்ளது. புஷ்பராஜ் உடனான நட்பை அறிந்த சங்கீதாவின் கணவர், சங்கீதாவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இவை அனைத்தையும் அறிந்திருந்தாலும், சங்கீதா மீதான காதல் மோகத்தால் ஈர்க்கப்பட்ட புஷ்பராஜ் காதல் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் தான் சங்கீதாவை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், புஷ்பராஜை கடுமையாக திட்டி சங்கீதாவுடனான தொடர்பை நிறுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்து புஷ்பராஜ் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புஷ்பராஜின் நிலையை அறிந்த சங்கீதா அவரை பார்ப்பதற்காக திருநெல்வேலிக்கு வந்துள்ளார். மருத்துவமனையில் இருந்த புஷ்பராஜின் உறவினர்கள் சங்கீதாவை கடுமையாக திட்டி வெளியேற்றியுள்ளனர்.
தனது காதலரை காண முடியாத விரக்தியில், சங்கீதா திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் விஷம் அருந்தி அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காதல் ஜோடி இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலியை கரம் பிடிப்பதற்காக
திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன். கடந்த 23ம் தேதி வெளியூர் சென்றிருந்த நிலையில், 24ம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் திருடப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர், திருட்டு நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது வாடகை கார் ஒன்று நீண்ட நேரம் நின்றுகொண்டு இருந்ததைத் தொடர்ந்து அந்த காரின் எண்ணைக் கொண்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.
காரை வாடகைக்கு எடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த அந்தோணி ஜோசப், விக்னேஷ், மேரி மைக்கேல் ஆகிய மூவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்தோணி ஜோசப் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்ய திட்டமிட்டபோது அதற்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்பதால் கொள்ளையடித்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து திருமணம் செய்ய திட்டமிட்டு அவரது நண்பர்களான விக்னேஷ் மற்றும் மேரி மைக்கேலுடன் சேர்ந்து முதலில் மேற்கு தாம்பரம், பழைய ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடி உள்ளனர்.
பின்னர் ஒரு காரை வாடகைக்கு எடுத்து இரவு நேரத்தில் சென்று நோட்டமிட்டு அங்கு பூட்டியிருந்த வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து பின்னர் வீட்டின் உள்ளே சென்று அங்குள்ள பீரோவை கடப்பாரையால் உடைத்து பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லாததால் வெறுப்படைந்தனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களைக் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.