அரசின் பணிமாறுதல் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு : அங்கன்வாடி தலித் பெண் பணியாளர்கள் இடமாற்றம் ரத்து!
மதுரையில் அங்கன்வாடி ஊழியர்களாக நியமிக்கப்பட்ட தலித் பெண்கள், கடும் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்த சுமார் ஆயிரத்து 500 அங்கன்வாடி காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜன் உத்தரவிட்டார்.
இதன்படி, திருமங்கலத்தை அடுத்த வலையபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமி அமைப்பாளராகவும், அன்னலட்சுமி சமையலராகவும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி, முத்தரையர் பிரிவினர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதை ஏற்காவிட்டால், தங்களின் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தனர். ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில், இப்பிரச்னையால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கில், இவர்கள் இருவரையும் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு, தற்காலிகமாக மாற்றம் செய்து அதிகாரிகள் வாய்வழி உத்தரவு பிறப்பித்தனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அங்கன்வாடி பணியாளர்களை இடமாற்றம் செய்தது ஏன் என்பது குறித்து 4 வார காலத்தில் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொண்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இணை இயக்குநர் மலர்விழி, வலையபட்டியில் விசாரணை மேற்கொண்டார். இதை அடுத்து அங்கன்வாடி பொறுப்பாளர் ஜோதி லெட்சுமியையும் அங்கன்வாடி உதவியாளர் அன்னலெட்சுமியையும் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், வலையபட்டி அங்கன்வாடி மையத்திலேயே இருவருமே பணியாற்ற ஏற்பாடு செய்துள்ளார்.
– நீதிராஜ பாண்டியன்