இந்தியா

குழந்தை தொழிலாளர் முறை தீர்வு தான் என்ன?

ஐ.நா.வின் ஓர் அங்கமான பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பால் (ஐ.எல்.ஓ.), குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், 2002-ம் ஆண்டு முதல் ஜூன் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 1986-ல் குழந்தைத் தொழிலாளர் முறை தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, 1987-ல் அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும், குழந்தைத் தொழிலாளர் கணக்கெடுப்புப் பணிகளும் தொடங்கின. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டாசுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, மாநிலத்திலேயே முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாம் கடந்து செல்லும் சாலையோரங்களில் உள்ள தேநீர் கடைகளிலோ, வாகன பழுது நீக்கும் மையங்களிலோ, ஜவுளிக்கடையிலோ, பட்டறைகளிலோ…. குழந்தை தொழிலாளர்களைக் காண முடியும்… அண்மையில், சென்னை புரசைவாக்கம் வட்டாட்சியரால் பானிபூரி தொழிற்சாலை ஒன்றில் 11 குழந்தைகளும் , மாதவரத்தில் சில குழந்தை தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தில் 2016ம் ஆண்டில் மேற்கொண்ட திருத்தத்தின்படி, 14வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்த தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது எனவும் 14 முதல் 18வயதுக்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறினால் 50ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் விதிக்க சட்டப்படியான வாய்ப்புகள் ஒருபுறமிருக்க சட்டத்திற்கு புறம்பாக இன்றும் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தொழிலாளர்களாக பயண்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் மாவட்ட அமலாக்க குழு திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பல பகுதிகளில் இருந்து குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை விளக்கமளிக்கின்றது.
குறிப்பாக, 2017-2018ம் நிதியாண்டில் 59 குழந்தைகளும் 2018-2019ம் ஆண்டில் 70 குழந்தைகளையும் மீட்டு கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை இதுபோன்று மீட்கப்பட்டு கல்வி பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே 6462 எனவும் தொழிலாளர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், 2018, 2019ம் ஆண்டில் 14 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் 3லட்சத்து 30ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகள் மீட்கப்படுவது ஒருபுறமிருந்தாலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க தவறிவிடுவதால் மீண்டும் கல்வி தடைப்பட்டு தொழிற்சாலைக்கே திரும்பும் நிலை பல பகுதிகளில் நடைபெற்று வருவதாக கூறும் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன், கிராம அளவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் முறையாக செயல்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும் என்கிறார்.
குழந்தைகள் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமெனில், சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு 18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் வேலை பார்க்க அனுமதிக்க கூடாது எனவும் கட்டாய கல்வி வயது வரம்பை 18 வயதாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையரகம் உருவாக்க வேண்டும் என கோருகின்றனர்.
கல்வி பயிலவும், ஆடல் பாடல் என கடக்க வேண்டிய பருவத்தை தொழிலாளியாக கடக்க நேர்ந்தால் குழந்தைகள் உடல்ரீதியாக பாதிக்கப்படுவதோடு உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.


குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் துறை சார்பில், சென்னை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளி குழந்தைகளுடன் மெட்ரோ தொடர் வண்டி விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது. இதில் 250 பள்ளி மாணவர்களுடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபில், நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிலோபர் கஃபில், “தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 69 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன் குழந்தைகளைப் பணியாளராக வைத்திருந்த 11 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கு கட்டுப்படுவோம்“ என்றார்.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பிரசாரத்தில் அனைவரும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும். தங்களது வீட்டருகே யாராவது குழந்தை தொழிலாளர்கள் இருந்தால், அவர்களது பெற்றோர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் 3 ஆண்டு சிறை தண்டனை : நீதிபதி எச்சரிக்கை


ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினர் 14 வயது நிரம்பாத சிறுவர்கள், 18 வயது நிரம்பாத வளர் இளம்பருவத்தினரை வேலைக்கு அமர்த்தவோ, அனுமதிக்கவோ கூடாது.
அப்படி அமர்த்தினால் அவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், 20 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
குழந்தைகளை பீடி சுற்று தல், தீப்பெட்டி தயாரித்தல், பட்டாசு, வெடி மருந்துகள் தயாரித்தல், கட்டுமான தொழில், நெசவு தொழில், செங்கல் காளவாசல், உணவு விடுதிகள், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. அப்படி ஈடுபடுத்தினால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள், என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button