நீட் தேர்வில் தோல்வி..! : தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை
நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகின. நீட் தேர்வு எழுதியவர்களில் 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ,மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.
ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர் நளின் கந்தல்வால், தேசியளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் மாநில அளவில் ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால், திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ (17) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த வைஷியா (17) மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களுடைய தற்கொலை பலரையும் சோகம் அடையச் செய்துள்ளது.
இதில் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, 12ம் வகுப்பு வகுப்பில் 600-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். நீட் தேர்வில் வெறும் ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த வேதனையில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
மற்றொரு மாணவியான வைஷியா தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர். நீட் தேர்வில் தோல்வி அடைந்த மனவேதனையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வில் தோல்வி காரணமாக மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்த நிலையில் நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடுகுப்பத்தைச் சேர்ந்தவர் மோனிஷா. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்தார். நீட் தேர்வை எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் அவர் தோல்வி அடைந்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை ஆணையம் நடத்தியது. தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மாணவிகள் தற்கொலையைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் பேசுகையில், நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றது. ஆனால், தமிழக அரசுப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களுக்கும், சிபிஎஸ்இ பாடப்பிரிவுக்கும் தொடர்பு கிடையாது. இதனால் தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.