மத்தியில் மோடிக்கு பொருளாதார சவால்கள் காத்துக் கொண்டுள்ளது. மாறி வரும் உலகப் பொருளாதாரம் மற்றும் மந்த நிலையில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மற்ற ஆசிய நாடுகளுக்கு இணையாக கொண்டு செல்ல வேண்டிய காட்டாயத்துடன் உள்நாட்டு சிக்கல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது மோடியின் அரசு.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி அலையின் மூலம் 282 இடங்களில் வெற்றி பெற்று பாஜக கட்சி ஆட்சி அமைத்து இருந்தது. இந்த முறையும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைந்துள்ளது. கடந்த முறை வெற்றி பெற்றதை விட இந்த முறை தனித்தே 303 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதற்குக் காரணம் பாஜகவின் வியூகம் மற்றும் கட்சி தேசியத் தலைவர் அமித் ஷா மிகவும் சாதுரியமாக சமூக ஊடகங்களை கையாண்டது என்று கூறலாம். தேர்தலுக்கு முன்பே அதற்கான பணிகளில் துரிதமாக இறங்கினார். தேர்தல் என்பது வெற்று பிரச்சாரம் மட்டும் கிடையாது. அதையும் தாண்டி வியூகம் என்று ஒன்று இருக்கிறது என்பதை பாஜக நிரூபித்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றாலும் காத்துக் கொண்டு இருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளும், சிக்கல்களும் மோடிக்கு சவாலாக இருக்கும். உலகின் முன்னணி பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பொருளாதார சிக்கல்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு நாட்டுக்கு சவாலாக இருந்து வருகிறது.
ஏற்கனவே நாட்டில் நிலவி வரும் வேலை வாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனை, பெரிய அளவிலான வருமான இடைவெளி, மோசமான நிலையில் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை சீர் செய்ய வேண்டிய நிலையில் பாஜக இருக்கிறது. நாடு எதிர்கொண்டு இருக்கும் இதுபோன்ற சிக்கல்களை மீறியும், காங்கிரஸ் அறிவித்து இருந்த நாட்டின் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 50 மில்லியன் மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் என்ற காங்கிரசின் வாக்குறுதியை உடைத்தும் ஆட்சிக்கு பாஜக வந்துள்ளது. பாஜகவும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஆண்டு ஒன்றுக்கு ஒரு ஏழை விவசாயிக்கு உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது. மத்திய வங்கியை பாஜக தலைமை மிரட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டும் நிலவி வந்தது. இந்த இமேஜை எல்லாம் இந்த முறை உடைக்க வேண்டியது உள்ளது. இந்த முறை பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் மிகவும் கடினம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்டு இருப்பது முக்கியமானது.
ஒரே இரவில் ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்து மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கியது, வேண்டாத, விரும்பாத திட்டங்களை மக்கள் மீது திணித்தது போன்ற தவறுகள் இந்த முறை இருக்காது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு விவசாயப் பொருட்களின் மீது உரிய விலை இன்னும் கிடைக்கவில்லை. கிராமங்களில் இன்னும் தொழிலாளர்களுக்கான ஊதியம் உயரவில்லை. இது மிகவும் ஏற்றத் தாழ்வான பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்கிறது. இதனால், பணம் செலவிடுவதில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு ஏற்றத்தாழ்வான பொருளாதாரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தொழில் நசிவு ஜிஎஸ்டி அமலுக்கு பின்னர் அதிகரித்துள்ளது. இதனால் வேலையிழப்பும் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டிய சூழலும் கவனம் பெறுகிறது.
இதேபோல் பெரிய அளவில் தொழில் முதலீடுகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லை. இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்பவில்லையா? ஏன், எதற்காக என்ற ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. மேலும், சாலை பணிகள் தவிர மின்சாரம், தொலைதொடர்பு துறைகளில் முதலீடு செய்ய எந்த உள்நாட்டு தனியார் அதிபர்களும் முன் வரவில்லை.
தொழில் துவங்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதுதான் முத்ரா என்ற பெயரில் பாஜக ஆட்சியில் மறுபெயர் பெற்றது. அந்த வகையில், முத்ரா கடன் வழங்கினோம் என்று பாஜக கூறினாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் 7-8 லட்சம் கோடி மட்டுமே சிறிய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. இந்த கடன் வழங்கப்பட்டதன் மூலம் எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவலை மக்களிடம் பாஜக அரசு கொண்டு சேர்க்கவில்லை.
வங்கிகளில் பெரிய அளவில் கடன் பெற்றுக் கொண்டு ஓடிய மல்லையா மற்றும் நிரவ் மோடி இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவார்களா? என்ற குரல் மீண்டும் எழும். இவர்களால் வங்கிகளுக்கு நேர்ந்த இழப்பீட்டை எப்படி ஈடு செய்வது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்து கொண்டுதான் இருக்கும்.
இவையெல்லாம் சேர்ந்துதான் இனி வரும் ஐந்து ஆண்டுகள் பாஜகவுக்கு மிகவும் முக்கிய காலங்களாக பார்க்கப்படுகிறது. இவற்றுக்காக தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்றத்தில் தங்களது குரலை உயர்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.