மது போதையில் தண்டவாளத்தில் பைக்கை பார்க் செய்து ரயிலை மறித்த இளைஞர் கைது!
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டது. லாடனேந்தல் நான்கு வழிச்சாலை பாலத்தின் அடியில் செல்லும் போது தண்டவாளத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு அதன் மேல் வாலிபர் ஒருவர் அமர்ந்திருப்பது கண்டு டிரைவர் ரயிலை நிறுத்திவிட்டார்.
ரயிலில் இருந்த பயணிகள் இறங்கி வந்து டூவீலரையும் அந்த வாலிபரையும் அப்புறப்படுத்திவிட்டு மானாமதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அரை மணி நேர தாமதத்திற்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது. பயணிகள் சிலர் வாலிபரையும் டூவீலரையும் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டனர்.
இதுகுறித்து மானாமதுரை ரயில்வே எஸ்.ஐ நாச்சி வழக்கு பதிந்து விசாரணை செய்ததில் ரயிலை மறித்த வாலிபர் மானாமதுரை அருகே ஏனாதி செங்கோட்டையைச் சேர்ந்த கார்மேகம் மகன் சண்முகவேல். தச்சு வேலை செய்யும் இவர் சிறிது நாட்களாக உடல்நலமின்றி இருந்தவர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காலை வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். அதன்பின் மதுப்போதையில் ரயிலை மறித்துள்ளார் என தெரியவந்துள்ளது. சண்முகவேலின் மீது வழக்கு பதிந்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.