தமிழகம்

கல்லூரி மாணவி திலகவதி கொலை சம்பவம் : சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் டி.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு இரண்டு மகள்கள். அதில் திவ்ய பிரியா ஏற்கனவே மரணமடைந்து விட்டார். திலகவதி தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி வேலை விஷயமாக நானும் எனது மனைவியும் வெளியே சென்று விட்டு மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு வந்தோம். அப்போது எனது மைத்துனர் மகேந்திரன் எனது மகளை ஒருவன் கத்தியால் குத்தியதாகவும், அது பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ் எனவும் தெரிவித்தார். திலகவதியை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் ஏற்கனவே திலகவதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தேன். புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஆகாஷை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு விசாரணை அதிகாரி தனது விசாரணையை நியாயமான முறையில் நடத்தவில்லை. போலீசார் குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுகின்றார்கள்.
சாட்சிகள் மற்றும் வாக்குமூலம் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்தும் குற்றவாளிக்கு ஆதரவாகவே உள்ளது. சம்பவம் நடந்தபோது மேலும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வந்துள்ளனர். ஆனால், விசாரணை அதிகாரி அதுகுறித்து உரிய முறையில் விசாரிக்கவில்லை. உண்மையை மறைத்து காதல் விவகாரம் என்று வழக்கை திசைதிருப்ப பார்க்கிறார்கள்.
எனவே, எனது மகள் கொலை வழக்கை கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரிக்க கூடாது. வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும். மேலும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் இடைக்கால இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுவரையிலான விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button