அரசியல்

பொன்பரப்பி வன்முறை: ராமதாசுக்கு அட்வைஸ் செய்த ஸ்டாலின்..! :

பதற்றமான சூழ்நிலை உருவாக இடம் அளிக்காமல், அனைத்து சமூகமும் அமைதியாக வாழ வழி ஏற்படுத்த வேண்டும் என டாக்டர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொன்பரப்பி வன்முறையை கண்டித்து கடந்த 24-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி” ஓர் அறிக்கை வெளியிட்டு பதற்றச் சூழ்நிலையை உருவாக்கி இருப்பதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி வரும் கட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சி. சமூக நீதிப் போராளி பேராயர் எஸ்றா சற்குணம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். சமூக நல்லிணக்கத்திற்காக உழைக்கும் இவர்கள் மீது கூட, டாக்டர் ராமதாசுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது. யார் மீதுதான் அவருக்கு நம்பிக்கை என்ற கேள்வியும் எழுகிறது.
தம்மை அரசியலில் இன்னமும் நிலை நிறுத்திக்கொள்ள ஆக்கபூர்வமான பல வழிமுறைகள் இருக்கும்போது, பின்னடைவை ஏற்படுத்தும் வழியை ஏன் தேர்வு செய்கிறார் என்று அவர் மீது அன்பும், அக்கறையும் உள்ள பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். அவரே ஒரு கற்பனைப் பேச்சை மனதில் செயற்கையாகக் கற்பித்து உருவாக்கிக்கொண்டு அதற்கு பதில் என்ற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு இந்த இரு தலைவர்கள் மீதும் வன்முறையை வீசும் தொலைபேசி மிரட்டல்களுக்கு காரணமாக இருப்பது பொறுப்புள்ள முதிர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு அழகல்ல; உரிய செயலும் அல்ல!
தேர்தலில் கூட்டணிகளும், முடிவுகளும் வெற்றி பெறும் வகையில் பா.ம.க.வுக்கு அமையாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இருக்கலாம். இதுவே அரசியலின் இறுதிக்கட்டம் இல்லை. அரசியலில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தவர் அவர். தேர்தல் அரசியலில் அவற்றை சகஜமாக எடுத்துக் கொள்வதே டாக்டர் ராமதாஸ் போன்ற தலைவர்களுக்கு ஏற்ற குணமாக இருக்க முடியும்.
அதை விடுத்து அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழும் சமுதாயங்களிடையே வெறுப்பைக் கக்கி, முத்தரசன் மற்றும் பேராயர் எஸ்றா சற்குணம் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குவது நமது தமிழ் சமூகத்திற்குப் பேராபத்தானது.
தேர்தல் வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் பொதுவானவை என்பதை டாக்டர் ராமதாஸ் நன்கு அறிவார். ஆகவே அவர் மீண்டும் இதுபோன்ற பதற்றச் சூழ்நிலைகள் உருவாகிடக் கிஞ்சிற்றும் இடம் கொடுக்காமல் தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமுகமான சூழ்நிலைகளை மட்டும் உருவாக்கி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேலும் மேலும் முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாவற்றையும் அறிந்திருப்பவர் அவர். அவருக்கு இது நிச்சயமாக அறிவுரை அல்ல; மனப்பூர்வமான வேண்டுகோள். இரா.முத்தரசன் மற்றும் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் உறுதியோடு பாதுகாத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பாமக., தலைவர் ஜி.கே.மணி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், போலி மத போதகர் எஸ்ரா சற்குணம் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் மருத்துவர் அய்யா அறிக்கை வெளியிட்டதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அய்யாவுக்கு அறிவுரைகளையும் இலவசமாக அவர் வழங்கியிருக்கிறார்.
ஸ்டாலினின் அறிக்கையை படித்து முடித்த பிறகு மனிதர்களை கொன்று உண்ணும் புலி, பசுத்தோலை போர்த்திக் கொண்டு ‘‘புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி’’ போதித்த உணர்வு தான் ஏற்பட்டது. பொன்பரப்பி நிகழ்வுகள் குறித்தோ, சமூக நல்லிணக்கம் குறித்தோ பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
பொன்பரப்பியில் வன்முறையைத் தூண்டியவர்களை போற்றிப் பாதுகாப்பதுடன், வன்னிய மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இல்லாத ஆதாரங்களையும், சாட்சிகளையும் போலியாக உருவாக்கி வருவது திமுக தான். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே மோதல் தொடர வேண்டும்; அதில் தாங்கள் குளிர் காய வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் கொள்கையும், கோட்பாடும் ஆகும்.
பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவதைப் போல, பொன்பரப்பியில் வன்முறையை தூண்டி விட்டவர்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டு, அமைதி குறித்து பேசுவதன் மூலம் தாம் ஒரு நல்ல நாடக நடிகர் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார். மொத்தத்தில் ஸ்டாலினின் அறிக்கை என்பது சாத்தான் ஓதிய வேதம். அதை மக்கள் நம்பமாட்டார்கள்.
மருத்துவர் அய்யா கடந்த 27-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் இருக்கிறது. தேவைப்பட்டால் அதன் நகலை ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கிறேன். அதை துரைமுருகன் போன்ற விவரமறிந்தவர்களின் உதவியுடன் மு.க.ஸ்டாலின் படிக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு வார்த்தை வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தால் கூட ஸ்டாலின் சொல்லுக்கு கட்டுப்படுகிறேன். அவ்வாறு இல்லை என்றால் பாமக., நிறுவனர் மருத்துவர் அய்யாவிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்புக் கேட்பாரா?
அதுமட்டுமின்றி, வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் எஸ்ரா சற்குணமும், முத்தரசனும் பேசிய பேச்சுக்களையும் துரைமுருகன் போன்றவர்களின் துணையுடன் ஸ்டாலின் கேட்க வேண்டும்.
‘‘நீங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் தான். நீங்கள் ஒன்றும் பிராமணர்கள் அல்ல. நீங்கள் ஒன்றும் உயர்குலத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால், உங்களுக்கு நீங்களே சத்திரியர் என்ற பட்டத்தைப் போட்டுக் கொள்கிறீர்கள். நீங்கள் எந்த விதத்தில் சத்திரியர்களாக முடியும்? வன்னியர்களாகிய நீங்கள் மரம்வெட்டிகளாக இருந்து, மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளி, பாறாங்கற்களையெல்லாம் உருட்டி வைத்து மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தினீர்கள்’’ என எஸ்ரா சற்குணம் பேசியுள்ளார்.
இடஒதுக்கீடு கோரி வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சிறிய மனிதர் சற்குணம் கொச்சைப்படுத்துவதை மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துகிறாரா? ‘‘நானும் ஒரு விடுதலைச் சிறுத்தை. இந்தக் கிழட்டு சிறுத்தை சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது’’ என்று அவர் மிரட்டியது தான் சமூக நல்லிணக்கத்தை போற்றும் செயலா?
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும் போது வன்னியர்களை மரம்வெட்டிகள் என்று கொச்சைப்படுத்தினார். அது சரியான செயலா? அதுமட்டுமின்றி, ‘‘நக்சலைட்டுகளை எதற்காக சுட்டுக்கொல்ல வேண்டும் என்று சொல்கிறோம். நக்சலைட்டுகளை எதற்காக தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். அதைப் போலத் தான் இவர்களையும் செய்ய வேண்டும்’’ என்றும் கொக்கரித்தார்.
இயேசுவின் போதனைகளை பரப்புவதாகக் கூறும் மத போதகரும், பொதுவுடைமை பேச வேண்டிய இயக்கத்தின் தலைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விஷம் கக்குவதும், வன்மம் பாராட்டுவதும் சரியா? அவர்களின் இந்த செயலை ஸ்டாலின் ஆதரிக்கிறாரா, கண்டிக்கிறாரா? நேரடி பதில் தேவை. இதுகுறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? அவர் தயார் என்றால் விவாதத்திற்காக இடத்தையும், நேரத்தையும் அறிவிக்கட்டும்.
கூட்டணியில் உள்ளவர்கள் ஒரு தவறு செய்தால் அதை ஆதரிப்பது அல்ல கூட்டணி தர்மம்; தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது தான் கூட்டணி தர்மம். அதை கூட்டணியின் தலைவரான மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். பொன்பரப்பி வன்முறை.. பொன்பரப்பி வன்முறை என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறும் ஸ்டாலின், பொன்பரப்பியில் ஊனமுற்ற அப்பாவி ஒருவரைத் தாக்கியும், இன்னொருவரை பாட்டிலால் குத்தியும், வன்னிய சமுதாய பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்பதை மனசாட்சியைத் தொட்டு சொல்வாரா?
திமுக அனைத்து சமுதாய மக்களின் கட்சி என்றால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களுக்கு ஆறுதலையும், வன்முறை செய்த விசிக கும்பலுக்கு கண்டனத்தையும் தெரிவித்திருக்க வேண்டும் தானே? அதை ஏன் ஸ்டாலின் இதுவரை செய்ய வில்லை.
மாறாக அரியலூர் மாவட்ட திமுக செயலாளரை காவல் நிலையத்துக்கு அனுப்பி, வன்னியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது ஏன்? இதில் இருந்தே வன்னிய மக்களுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வகையான உறவு என்பதை அறிந்து கொள்ளலாம்.
வாக்கு அரசியலுக்காக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கும்பல் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதும், நாகரிகத்தையும், நெறிகளையும் மறந்து கைத்தட்டலைப் பெற வேண்டும் என்பதற்காக நான்காம் தர பேச்சாளர்களைப் போல வக்கிரத்தையும், வன்மத்தையும் கலந்து பேசுபவர்களை சமூக நல்லிணக்கவாதிகள் என்று வக்காலத்து வாங்குவதும் திமுகவின் தலைவராகவும், திமுக கூட்டணியின் தலைவராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அழகல்ல.
ஸ்டாலின் அறிக்கை எனக்கு எந்த வகையிலும் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. ஏனெனில் இப்போது எஸ்ரா சற்குணமும், முத்தரசனும் பேசிய பேச்சுக்களை ஒரு காலத்தில் பேசிய கட்சி தான் திமுக.
தருமபுரி நிகழ்வுகளின் போது, பிரச்சினைக்கு காரணம் யார்? என்பது பற்றி ஆராயாமல், ஆதிக்க சாதியான வன்னியர்கள் தான் அனைத்துக்கும் காரணம் என்று திமுக அவதூறு பரப்பியதை மறக்க முடியுமா?
உண்மை கண்டறியும் குழுவை தருமபுரிக்கு அனுப்பி வன்னியர்களை வன்முறையாளர்களாக சித்தரித்ததை மன்னிக்க முடியுமா? வன்மமும், வன்மமும், வஞ்சகமும், வஞ்சகமும் சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற அணி என்ற பெயரில் வன்னியர்களுக்கு எதிரான வன்மக் கூட்டணியாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதுதான் இன்றைய அவசரத் தேவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமூகங்களிடையே மோதலை மூட்டும் திமுக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டால் தான் அது நடக்கும்; விரைவில் இது சாத்தியமாகும் என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button