பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் 24 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா !

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 24ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 652 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பரந்து விரிந்து, உயர்த்தப்பட்ட கல்லூரியாக 2600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் 24 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். 467 இளநிலை பட்டங்களையும், 185 முதுகலை பட்டங்களையும் மாணவ, மாணவிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர் முனைவர் ஜோதிபாசு வழங்கி மாணவர்களிடம் பேசுகையில்.. இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகமான அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றுள்ள நீங்கள், சமூகத்தின் பாதுகாப்பிற்கும், சமூகப் பொறுப்புடனும் இருக்க வேண்டும். இளைஞர்கள் நம்பிக்கையுடனும் லட்சியத்துடனும் செயல்பட வேண்டும். உயர் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் பட்டம் பெற்றுள்ள நீங்கள் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இளைஞர் நலன் மற்றும் நுண்கலை மன்றம், விளையாட்டு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழாவில், தமிழ் துறை தலைவர் மணிமாறன் வரவேற்றார், தலைமை ஏற்று கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர் சிவக்குமார் வாசித்தார். இளைஞர் நலன் மற்றும் நுண்கலை ஆண்டறிக்கையை ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறை தலைவர் கண்ணன், உடற்கல்வித்துறை ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் பிரசாத் வாசித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் மதுரை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டு கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்கள். இறுதியில் கணிதத் துறை தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.