தமிழகம்

மரக்காணம் கள்ளச்சாராய பலி.. நெருக்கடியில் திமுக அரசு..!

மரக்காணம் அருகே உலா மீனவர் கிராமமான எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து சங்கர், சுரேஷ், தரணிவேல் உட்பட 4 பேர் வாந்தி, மயக்கமுற்று உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரத்யேக சிறப்பு சிகிச்சைக்காக தனி அறை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாநிலத்தை உலுக்கியுள்ள இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இரங்கலையும், அரசுக்கு எதிரான கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘மரக்காணம் பகுதியில் கள்ளச் சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச் சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.

உடனடியாக தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து, கள்ளச் சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.

கள்ளச் சாராயம், போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் என கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ்நாடு, தொழில் துறையின் மையமாக விளங்கிய தமிழ்நாடு, மருத்துவக் கல்வியில் முன்னணி மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு, சுகாதார மையமாக விளங்கிய தமிழ்நாடு, இன்று பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக, கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் புழங்கும் மாநிலமாக, கள்ளச் சாராயம் பெருக்கெடுத்தோடும் மாநிலமாக, கொலைகளும், கொள்ளைகளும் அதிகம் நடக்கும் மாநிலமாக கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது அனைத்துத் தரப்பினரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரமுள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதன் காரணமாக சங்கர், தரணிவேல் மற்றும் சுரேஷ் ஆகியோர் மயக்கமுற்று புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, எக்கியார்குப்பம் மீனவப் பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் என்பவர் கள்ளச் சாராயம் அருந்தியதன் காரணமாக உயிரிழந்தார் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில், காவல் துறையினர் இது குறித்து அப்பொழுதே தீவிர விசாரணை நடத்தி, கள்ளச் சாராயம் விற்பவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், மூன்று பேர் உயிரிழந்து இருக்க மாட்டார்கள்.

ஆனால், தி.மு.க. அரசின் அக்கறையின்மை காரணமாக, நிர்வாகத் திறமையின்மை காரணமாக மூன்று பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். கள்ளச் சாராயம் ஒருபுறம் என்றால், மறுபுறம் போதைப் பொருள் நடமாட்டமும், பாலியல் பலாத்காரமும் தலைவிரித்து ஆடுகிறது.

பத்திரிகையைத் திறந்தாலே பாலியல் துன்புறுத்தல்கள் என்ற அளவுக்கு நிலைமை மோசமாகி கொண்டே போகிறது. அபின், சில்வர், கேப்டமைன் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை சென்னை மற்றும் புறநகரில் அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போதைப் பொருட்கள், போதையின் கால அளவீடுகளின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஊசி வாயிலாக போதைப் பொருட்கள் ஏற்றப்படுவதாகவும், இதனால் பாதிக்கப்படுபவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள்தான் என்றும் கூறப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் நாளை இந்தியக் குடியரசின் மன்னர்கள். அவர்களிடம் கல்வியும், உயர்ந்த குறிக்கோள்களும் இருக்க வேண்டும்.

ஆனால், இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கள்ளச் சாராயமும், போதைப் பொருட்களும் அவர்களிடம் இருப்பது என்பது மிகுந்த வேதனைக்குரியது. இதன் வாயிலாக, தமிழ்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு தவறிவிட்டது.

அரசு தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் கள்ளச் சாராய கலாச்சாரம், போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை அடியோடு அகற்றுவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமென்று முதலமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என அதில் கூறியுள்ளார்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button