கூலித் தொழிலாளியின் வீட்டை சூரையாடிய EX எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கூலித் தொழிலாளியின் வீட்டை இடித்து சூரையாடிய சம்பவத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயத்தை அடுத்த அலம்பை ஊராட்சிக்குட்பட்ட நெய்க்காரம் பாளையத்தில் வசித்து வருபவர் சிவா (60). கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக சிவாவின் பெரியப்பா காளிக்கு ஊர் மக்கள் நத்தம் புறம்போக்கு நிலத்தில் மூன்றரை செண்ட் இடம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக பெரியப்பா காளி இறந்துவிடவே மேற்படி நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி சிவா வசித்து வந்துள்ளார்.
இதனிடையே சிவா குடியிருக்கும் வீடு அருகே சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இரண்டேகால் செண்ட் இடம் பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே சுப்பிரமணி தனது வீட்டை விரிவு படுத்தப்போவதாகவும், எனவே சிவாவை வீட்டை காலி செய்யுமாறு பல முறை பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சிவா வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டை 5 பேர் கொண்ட கும்பல் இடித்து சேதப்படுத்துவதாக சிவாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சிவா தனது வீட்டை இடித்து சேதப்படுத்திய சுப்பிரமணியம், தினேஷ்குமார், விஜயகுமார், முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜன் மற்றும் காங்கேயம் நகராட்சி தலைவர் ந. சூர்யபிரகாஷ் ஆகியோர் மீது காங்கேயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய தண்டனை சட்டம் 147,148,457,427 & 3 (1) of TNPPD Act., பிரிவுகளின் கீழ் காங்கேயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் பிரதிநித்துவத்தை நன்கு தெரிந்தவர்களே கூலி தொழிலாளியின் வீட்டை சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.