திமுகவின் மூத்த நிர்வாகி ம.தினகரன் விளக்கம்
பெருந்தலைவர் காமராஜர் மறைந்த பொழுது அவருக்கு கடற்கரையில் இடம் ஒதுக்க மறுத்தார் என்பது சிலரின் குற்றச்சாட்டு. இது குற்றச்சாட்டு அல்ல அவதூறு என்று இராமநாதபுரம் திமுகவின் மூத்த நிர்வாகியும், பரமக்குடியின் ஒன்றிய செயலாளருமான ம.தினகரன் நம்மிடம் கூறுகையில்,
இந்தியா முழுவதும் மிசா எனப்படும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்ட போது பெருந்தலைவருக்கு நெருக்கமாக இருந்து அரசியல் பணிபுரிந்த தலைவர்களெல்லாம் இந்தியா முழுக்க கைது செய்யப்பட்டார்கள். காமராஜரை கைது செய்ய விடமாட்டேன் என்று அப்போது சொன்னவர் மட்டுமல்ல. இது சர்வாதிகாரத்திற்கான தொடக்க விழாவா? என்று தீர்மானம் போட்டவர். அன்று முதல்வராக இருந்த கலைஞர். அவர் முதலமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று காமராஜரிடமே ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகர்கள் சொன்னபோது கலைஞர் பதவி விலகக் கூடாது. விலகுவது முட்டாள்தனம். அவர் ஆட்சியில் இருந்தால்தான் தமிழ்நாட்டிலாவது ஜனநாயகம் பிழைக்கும் என்று சொன்னவர் பெருந்தலைவர்.
சென்னை தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள வீட்டில் வாழ்ந்த பெருந்தலைவர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் இறந்து போனார். மகாத்மா காந்தி பிறந்த நாளில் இந்த காலா காந்தி மறைந்து போனார். அப்போது மணி மதியம் மூன்று இருபது.
பெருந்தலைவர் மறைந்த செய்தி முதல்வர் கருணாநிதிக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பிறகுதான் மற்றவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவரது உடலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கலாம் எனவும் அங்கேயே தகனம் செய்யலாம் எனவும் சில காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்கினார்கள். இது முதல்வர் கருணாநிதியின் காதுக்கு போனதும் இல்லை.. இல்லை.. காமராசரின் உடலை அரசு மரியாதையுடன் தான் தகனம் செய்ய வேண்டும். அவர் உடலை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இராஜாஜி மண்டபத்தில் வைக்க வேண்டும் என்று சொன்னவர் முதல்வர் கருணாநிதி.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் வைத்தால் அவர் காங்கிரஸ் தலைவராக மட்டுமே பார்க்கப்படுவார். அரசு மரியாதையுடன் இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படும்போது பெருந்தலைவராக போற்றப்படுவார் என்று நினைத்தவர் கருணாநிதி.
காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள காந்திமண்டபத்திற்கு பக்கத்தில் தகனம் செய்து கொள்ளலாம் என்று கருதிய முதல்வர் கருணாநிதி அந்த இடத்தை பார்வையிட இரவு எட்டுமணிக்குச் சென்றார். அப்போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடி கிண்டியில் இரண்டு ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தார். ஒரு வாரகாலம் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றார். இறுதி ஊர்வலம் நடக்கும் அக்டோபர் மூன்றாம் தேதி தமிழகத்தில் அரசு விடுமுறை என்று அறிவித்தார்.
இராஜாஜி மண்டபத்தில் இருந்த பெருந்தலைவரின் உடலுக்கு கருணாநிதியும் அமைச்சர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் இந்திராகாந்தியை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் கருணாநிதி அழைத்து வந்தார். ஒரு உயர்ந்த இந்தியரை, உணர்ச்சி வாய்ந்த தமிழரை நாடு மதிக்கும். நல்ல தலைவரை இழந்து விட்டோம் என்று வானொலியில் பேசினார். காமராஜரின் உடல் இராணுவமரியாதையுடன் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்தார் கருணாநிதி. முப்படை வீரர்கள் தூக்கி வந்த காமராஜரின் உடலை வாங்கி பீரங்கி வண்டியின் மீது வைத்தவர்கள் யார் தெரியுமா? தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் தேவராஜாஸ். அன்றைய திமுக அமைச்சர் க.ராசாராம். கிண்டியில் தகன மேடை அருகே பிரதமர் இந்திராவுடன் முதல்வர் கருணாநிதியும் இருந்தார். மலர்வளையம் வைத்தார் கருணாநிதி. பின்னர் நிருபர்களை சந்தித்த கருணாநிதி, ‘இந்த இடத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்படும்’ என்று அந்த இடத்திலேயே அறிவித்தார்.
காமராஜர் பிற வீட்டையும் வாங்கி நினைவுச் சின்னமாக ஆக்க முடிவு செய்து இருக்கிறோம் என்று அறிவித்தவர் கருணாநிதி. இதுதான் உண்மை வரலாறு. அன்றைய ஸ்தாபன காங்கிரசுக்கும் திமுகவுக்கும் நட்புறவு இல்லாத காலம் அது. திமுகவுடன் கூட்டணி இல்லை என்று இரண்டு மாதங்களுக்கு முன்புதான் காமராஜர் அறிவித்திருந்தார். ஆனாலும் கருணாநிதி அதைப்பற்றி கவலைப்படாமல் ஒரு பெருந்தலைவருக்குச் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் ஒரு மகனைப் போல இருந்து செய்தார். கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை எனப் பெயர் வைத்தவர் கருணாநிதி. கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர் கருணாநிதி. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைத்தவர் கருணாநிதி. காமராஜர் உயிரோடு இருக்கும் போதே அதாவது 1961 ஆம் ஆண்டே சென்னையில் காமராஜருக்கு சிலை வைத்து அதை அன்றைய பிரதமர் நேருவை அழைத்து வந்து திறக்க வைத்தது திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநகராட்சி மேயர் அ.போ.அரசு.
காமராஜருக்கு கடற்கரையில் நாங்கள் இடம் கேட்கவில்லை என்று காமராஜரின் அன்றைய படைத்தளபதிகளுள் ஒருவரான பழ.நெடுமாறனே சொல்லிவிட்ட போது யார் சொல்வதை பற்றியும் கவலை இல்லை.
வைரவா விளக்கை அணைத்து விட்டுப்போ.. என்பது காமராஜரின் கடைசி வார்த்தைகள். அவதூறு கூறுபவர்களெல்லாம் புத்தியை அணைத்துவிட்டு நடமாடுபவர்கள்..” இவ்வாறு கூறினார்.