தனி அடையாளத்திற்காக போராடும் அமைச்சர் ! தனி ஒருவருக்காக புதிய மாவட்டமா ?.!

பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள். அதே பேராசை தான் தற்போதைய ஆளும் கட்சியின் உணவுத்துறை அமைச்சருக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியின் மேற்கு பகுதியில் மட்டும் தனக்கான ஆதரவை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் ? எதிர் காலத்தில் அரசியலில் தனக்கென தனி அடையாளம் தேவை என்பதற்காக கடந்த சில மாதங்களாக தனி மாவட்டம் வேண்டுமென அமைச்சர் சக்கரபாணி போராடி வருகிறார்.

பழனி மாவட்டம் பிரிப்பதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் , கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மக்களும் தங்களை பழனி மாவட்டத்துடன் இணைக்க வேண்டாமென தங்களது எதிர்ப்பை தெரிவித்து விட்டனர். அத்துடன் அமைச்சரின் சொந்த தொகுதியான ஒட்டன்சத்திரம் தொகுதியை சேர்ந்த பொதுமக்களும், சொந்த கட்சியை சேர்ந்தவர்களும் பழனி மாவட்டம் உருவாக்க ஆதரவு குரல் எழுப்பாமல் அமைதி காத்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மட்டும் தொடர்ந்து தனி மாவட்டம் வேண்டுமென போர்கொடி தூக்குவது பலருக்கு பெரும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. இதன் பின்னனியில் இருக்கும் ரகசியங்களை தெரிந்து கொள்ள அந்த கட்சி வட்டாரம் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி, பழனி மாவட்டம் பிரிப்பதற்கு ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது இன்னும் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமாரும் இந்த விசயத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் அமைதி காப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் புதிதாக பழனி மாவட்டம் உருவாக்குவதற்கு தாராபுரம் தொகுதியை பழனியுடன் இணைக்க அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் ஆதரவு கேட்ட உணவுத்துறை அமைச்சருக்கு, பாதி அளவிற்கு ஆதரவு தெரிவித்து விட்டு, அப்படியே திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான மு.பெ. சாமிநாதனுக்கு ஆதரவாக சென்று தாராபுரம் தொகுதியை பழனியுடன் இணைக்க வேண்டாமென தலைமையிடம் கடிதமும் கொடுத்து வந்துள்ளார். இந்த விசயத்தை தெரிந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் தற்போது பெரும் அப்செட்டில் இருப்பதாகவும் ஒட்டன்சத்திரம் திமுக வட்டாரம் கூறுகிறது.

மடத்துக்குளம் தொகுதியில் உள்ள கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வும் தற்போதைய திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவருமான ஜெயராமகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி இப்படி சில முக்கியஸ்தர்களை தன் பக்கம் வைத்துக்கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கி ராஜ்ஜியம் செய்து விடலாம் என நினைத்து வந்த உணவுத்துறை அமைச்சருக்கு, இப்போது கூடுதல் சிக்கல்களும் எழுந்துள்ளன. திமுகவில் செல்வாக்கு மிகுந்த டாஸ்மாக் அமைச்சர் பழனி மாவட்டத்தில் உடுமலையை இணைக்க கூடாது, அப்படி செய்தால் கொங்கு மண்டலத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் வசிக்கும் மக்களின் பேச்சு, பழக்க வழக்க முறைகளுக்கு முற்றிலும் வேறுபாடு இருக்கும் என்பதால், பழனியுடன் உடுமலையை இணைத்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் பல்வேறு இழப்புகள் திமுகவுக்கு வந்தடையும் என்பதாக திமுக தலைமையிடம் கூறியுள்ளார். இதனால் திமுக தலைமையும் அதனை சரி என ஒப்புக்கொண்டு, பழனியுடன் உடுமலையை இணைக்க மறுப்பு தெரிவித்து விட்டது. இந்த தகவலை அறிந்த உணவுத்துறை அமைச்சர் மீண்டும் ஒரு புதிய திட்டத்தோடு தலைமையை சந்தித்து இருக்கிறார்.

அதில், ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், தாராபுரம் ஆகிய நான்கு தாலுக்காக்களை இணைத்து புதிய மாவட்டத்தை அறிவிக்கவும் கேட்டுக்கொண்ட அமைச்சர், தனி மாவட்டம் உருவாக்கிய பின்பு அதில் தனது ஆதிக்கத்தை செலுத்தவும் புதிய முயற்சியை செய்து வருகிறார். மடத்துக்குளம் தொகுதியை பொறுத்தவரையில், உடுமலை ஒன்றியத்தை உள்ளடக்கிய தொகுதியாகும். உடுமலை தொகுதி உடுமலை, குடிமங்கலம் பகுதிகளோடு முடிந்து விடுகிறது. மேலும், உடுமலை தொகுதியானது, உடுமலையிலிருந்து வடக்கு பகுதி பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள சூளேஸ்வரன்பட்டி வரை உள்ளடக்கி இருப்பதால், மடத்துக்குளம் தொகுதியை பழனியுடன் இணைத்தாலும் அதில் உடுமலை தாலுக்காவில் இருக்கும் 60 விழுக்காடு மடத்துக்குளம் தொகுதிக்குள் இடம்பெறுகிறது. இதனால் தொகுதி மற்றும் தாலுக்கா பிரிப்பதில் பெரும் குழப்பம் ஏற்படும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக அரசுக்கு ஏற்கனவே 8 லட்சம் கோடி பெரும் கடன் சுமை இருக்கும் நிலையில், பொள்ளாச்சி மாவட்டம், பழனி மாவட்டம் என இரண்டு மாவட்டங்களை பிரிப்பதால், அரசு கூடுதல் கடன் சுமைக்கு தள்ளப்படும். பொள்ளாச்சி பகுதியானது விவசாயத்தை மட்டும் முக்கிய ஆதாரமாக கொண்டுள்ள பகுதியாகும். மற்றபடி பொள்ளாச்சியில் சொல்லும்படியான தொழிற்சாலைகளோ, அரசு கல்வி நிறுவனங்களோ எதுவும் இல்லை. பொள்ளாச்சிக்கும், பழனிக்கும் மத்தியில் இருக்கும் உடுமலைப்பேட்டை பகுதியானது பல்வேறு தொழிற்சாலைகள், நூற்பாலைகள், தனியார் நிறுவனங்கள், மத்திய மாநில கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதியாகும். மேலும் வருவாய் ரீதியாகவும் அரசுக்கு பெரும் பங்களிப்பை கொடுக்கும் உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கி புதிய மாவட்டத்தை அறிவிப்பதால் அரசுக்கு எந்தவிதமான இழப்போ, நிதி நெருக்கடியோ ஏற்படாது.
மேலும், அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு போதுமான இடவசதிகளும் இங்கே உள்ளன. பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் இந்த விசயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். கொங்கு மண்டலத்தை பொறுத்த வரையில், இதுவரை ஆதிக்கம் செலுத்த முடியாத திமுக, 2026 சட்டசபை தேர்தலில் இதன் மூலம் வெற்றியை பெற புதிய வழியாகக்கூட இருக்கலாம். கொங்கு மண்டலத்தில் திமுக கோலோச்சிட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர்த்து உணவுத்துறை அமைச்சர் என்ற ஒரு தனி நபருக்காக சரியான திட்டமிடல் இல்லாமல் மாவட்டம் பிரித்தால் திமுக பெரும் இழப்பை சந்திப்பதோடு, வருவாய் ரீதியாகவும் பெரிய பின்னடைவை சந்திக்கும். எனவே மாவட்டம் பிரிப்பதில் தமிழக முதல்வர் சற்று கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட வேண்டுமென அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
– கா.சாதிக்பாட்ஷா