ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையை ஒடுக்கத் துடிக்கும் அதிவீரன் ! என்ன சொல்கிறார் “மாமன்னன்” ?

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “மாமன்னன்”
கதைப்படி… சேலம் மாவட்டம் காசிபுரம் ( தனி தொகுதி ) சட்டமன்ற உறுப்பினராக ( வடிவேலு ) மாமன்னன் இருந்து வருகிறார். அவரது மகன் ( உதயநிதி ) அதிவீரன் தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருகிறார். அவருக்கு பன்றியின் மீது அதீத காதலால் வீட்டிற்குப் பின்னால் பன்றிகள் வளர்த்து வருகிறார். அதிவீரன் சிறுவனாக இருந்த போது மூன்று நண்பர்களோடு கோவில் குளத்தில் குளிக்கச் சென்றபோது ஆதிக்க சாதியினரால் கல்லால் தாக்கி அவனது நண்பர்கள் மூன்று பேரும் கொள்ளப்படுகின்றனர். இந்த சம்பவத்தில் தந்தை மாமன்னன் ஏதும் செய்யாததால் 15 வருடமாக அவருடன் பேசாமல் இருக்கிறார்.

மாமன்னன் சார்ந்த சமத்துவ சமூக நீதி மக்கள் கழகம் கட்சியின் மாவட்டச் செயலாளராக ஆதிக்க சாதியைச் சேர்ந்த ( ரத்தின வேல் ) பகத் பாசில் இருந்து வருகிறார். கல்லூரி படிப்பை முடித்து ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறார் ( கீர்த்தி சுரேஷ் ) லீலா. இவரது கோச்சிங் சென்டரால் இந்த மாவட்டச் செயலாளரின் அண்ணன் நடத்தும் கோச்சிங் சென்டருக்கு வருமானம் குறைகிறது. இதனால் இந்த சென்டருக்கு அதிக தொல்லைகள் கொடுக்கின்றனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் மாறிமாறி அடித்து நொறுக்கப்படுகிறது. இதில் அதிவீரன் சம்பந்தப்பட்டுள்ளதால் எம்எல்ஏ மாமன்னன் மாவட்டச் செயலாளர் வீட்டிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறார்.
அங்கு ரத்தினவேல் மாமன்னனை நடத்திய விதம் அதிவீரனுக்கு பிடிக்காததால் இருவருக்கும் கைகலப்பாக மாறுகிறது. இந்தப் பிரச்சினை முதலமைச்சர் வரை சென்று ரத்தினவேல் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து, அந்த மாவட்டத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த துடிக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் தேர்தலில் மாமன்னனை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தி, ஆதிக்க சமுதாயத்தினர் ஆதரவோடு மாமன்னனை ஊருக்குள் நுழையவிடாமல் துரத்துகிறார்.
பின்னர் தேர்தலில் மாமன்னன் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? அதன்பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை..

சமூக நீதியின் பெயருள்ள அரசியல் கட்சிக்குள் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் , வாக்குவங்கி அரசியல் சமரசங்களையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பொறுமையாக ஜனநாயக வழியில் பயணிப்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதையும், ஆதிக்க சாதியிலும் சமத்துவ சிந்தனையிடன் பலர் இருக்கிறார்கள் என்பதையும் அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
ஒருவனை அடித்துவிட்டோம் என பெருமைப்படுவது அய்யோக்கியத்தனம், அடிக்கவே முடியாது என அடிவாங்கிட்டே இருப்பது கோழைத்தனம் என இதுபோன்ற அரசியல் வசனங்கள் அதிவீரன் பேசும்போது சமூகநீதி சிந்தனை வெளிப்படுகிறது. உதயநிதியின் சினிமா கேரியரில் இந்தப் படம் அவருக்கு முக்கியமான படம் என்றே சொல்லலாம். உதயநிதி நடித்திருக்கிறார் என்பதைவிட அதிவீரனாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

வடிவேலுக்கு மாமன்னன் மூலம் பக்காவான ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குனர். சமத்துவ, சமூகநீதி சிந்தனையுடன் படம் முழுவதும் பயணிக்கிறார். வடிவேலுவை இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில், அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடக்குமுறையை நீதானமாக கடந்து வந்து மாமன்னன் நாற்காலியில் அமர்கிறார் வடிவேலு. இதற்கு அவர் இழந்தது ஏராளம். படம் முழுவதும் தனது அனுபவத்தின் காரணமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார். ஏ.ஆர். ரகுமானின் பின்னனி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தாலும், இதுபோன்ற வளரும் இயக்குனர் படத்திற்கு இசை அமைத்திருப்பது ஆச்சரியம். இந்தப் படத்தில் ஏ.ஆர். ரகுமானின் திறமைக்கு, அவரது பங்களிப்பு குறைவுதான். மாரி செல்வராஜின் சாதிய வன்மம் படம் முழுவதும் வெளிப்படுத்துகிறது.