கொரோனா பலி.. ஐபோனுக்கு விலைபோன அரசு மருத்துவர்… முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 300 பேர் வீட்டிலேயே தனித்திருக்கும் நிலை…
சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு பலியான முதியவரின் சடலத்தை, மாரடைப்பு எனக்கூறியதை நம்பி அடக்கம் செய்த ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் தனித்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனாவை மறைத்த பலியானவரின் குடும்பத்திற்கு எதிராகவும், ஐ போனுக்காக அரசு மருத்துவர் செய்த விபரீத செயலை கண்டித்தும் மக்கள் உள்ளக் குமுறலை கொட்டிதீர்த்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் தொழில் அதிபர் பீலி ஜமால் முகம்மது..! சென்னை மண்ணடியில் வசித்து வந்த 71 வயதான ஜமால் முகம்மது வெளி நாடுகளுக்கு சுறா மீன்களின் வால் பகுதியை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார் ..!
தொழில் விஷயமாக தாய்லாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்று சென்னை திரும்பிய ஜமால் முகமதுவை விமான நிலையத்தில் பரிசோதித்த அதிகாரிகள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்றுகையில் முத்திரையிட்டு அனுப்பி உள்ளனர்.
கடந்த 2 ஆம் தேதி சளி காய்ச்சலுடன், கடுமையான இருமலால் அவதிப்பட்ட ஜமால்முகமதுவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அடுத்த 2 மணி நேரத்தில் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜமால் முகமது பலியானதாக கூறப்படுகின்றது.
கொரோனா ஆய்வு முடிவு வருவதற்கு முன்பாக வழக்கறிஞரான ஜமாலின் மகன், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆர்.எம்.ஓ ரமேஷிடம் ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்து அவரது ஒத்துழைப்புடன், ஜமாலின் சடலத்தை சென்னையில் இருந்து வேன் மூலம் கீழக்கரைக்கு கொண்டு சென்று வழக்கம் போல அடக்கம் செய்துள்ளனர்.
மறு நாள் ஜமால்முகமது கொரோனாவால் உயிரிழந்ததாக அரசு உறுதிபடுத்தியதை தொடர்ந்து, இறுதி சடங்கில் பங்கேற்றமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 300 பேர் வீட்டிலேயே தனித்திருக்கும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.
கீழக்கரையில் அத்தனை தெருக்களும் பேரிகார்டுகளால் இழுத்து மூடப்பட்டு அங்குள்ள அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. வெளியூர் நபர்கள் ஊருக்குள் நுழையவும் உள்ளூரை சேர்ந்தவர்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜமால்முகமதுவின் மகன்களான கஜாமுஜிபூர், அல்லாபிச்சை ஆகியோர் மீது கொரோனா குறித்த உண்மையைமறைத்து 144 தடைஉத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு நோய்தொற்று ஏற்படும் நிலையில் நடந்து கொண்டதாக கீழக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்க கூடும் என்ற அச்சத்தால் அவர்களை கைது செய்யாமல்வீட்டில் தனித்திருக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே தான் யாரிடமும் ஐ போன் பெறவில்லை என்று மறுத்துள்ள ஸ்டான்லி ஆர்.எம்.ஓ ரமேஷ், அரசியல் அழுத்தத்தால் சடலத்தை ஒப்படைத்ததாக கூறியுள்ளார். அதே போல தனது தந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக தகவல் பரப்பினால் வழக்கு தொடருவேன் என்று ஜமாலின் மகள் வாட்ஸ் ஆப்பில் எச்சரிக்கை விடுத்ததால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த கீழக்கரை மக்கள் அரசுக்கு ஒத்துழைக்காத ஜமாலும் அவரது குடும்பமும் தான் இந்த நிலைக்கு காரணம் என்று கொந்தளிக்க தொடங்கி இருக்கின்றனர். தங்கள் குடும்பம் முழுவதும் தனித்திருப்பதாகவும் யாருக்காவது சந்தேகம் என்றால் வீட்டிற்கு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று ஜமாலின் இளைய மகள் குரல்பதிவிட்டுள்ளார்.அதற்கும் அப்பகுதி மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
இது ஒருவரை ஒருவர் பழி சொல்லும் நேரமில்லை, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிட முனைப்பு காட்டுவோம், அரசின் அறிவுறுத்தலை ஏற்று சளி காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிப்பதோடு, விழிப்புணர்வுடன் வீட்டில் தனித்திருந்து கொரோனாவை நெருங்கவிடாமல் விரட்டியடிப்போம்..!
- நூருல்அமீன்