சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம் கம்பீரமாக எழும்…! : எ.வ.வேலு
மதுரையில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியான தகவல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆங்கிலேயராக பிறந்த போதும் நம்மை அடக்கி ஆள வந்திறங்கிய கும்பலில் கருணை மனதோடும், ஏரோட்டும் உழவினத்தை உயிராக நேசிக்கிற திறந்த இதயத்தோடும் பிறந்த கருணையாளர் கர்னல் பென்னிகுயிக். அவர் வாழ்ந்த இல்லத்தை அவரது நினைவுகளை இந்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அவரது வாழ்விடத்தை இடிப்பதென்பதும், அவ்விடத்தில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்போம் என்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது. தன் ஆஸ்திகளை எல்லாம் இங்கிலாந்து சென்று விற்று அப்பணத்தை கொண்டு ஐந்து மாவட்ட உழவினத்தின் நீராதாரத்தை காக்கிற பெரியாறு அணையை கட்டி முடித்தவர் கர்னல் ஜான் பென்னிகுயிக்.
ஏற்கனவே கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரத்து இல்லத்தை
நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்போம் என்று சொல்லியவர்கள், இன்று வரை அதை நிறைவேற்றாத நிலையில், இப்போது பெரியாறு அணையை கட்டிய நல்லவர் ஒருவரின் இல்லத்தை இடித்து நூலகம் கட்டுவோம் என்பது விமர்சங்களையே உருவாக்கும். கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதற்கு கர்னல் பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை தவிர வேறெங்கும் இடம் இல்லையா?
நூலகத்திற்கு எதிரான கட்சி அதிமுக அல்ல. ஆனால் யார் பெயரில் அமைக்கப்படுவது, அதற்காக யார் பெயரிலானது இடிக்கப்படுகிறது என்பது விவாதத்திற்குரியது. எனவே கருணாநிதி பெயரிலான நூலகத்தை வேறிடத்தில் நிறுவுவதே நியாயமானது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம் அமைவது அ.தி.மு.க.,வுக்கு கசக்கிறது; கதை – கற்பனை – அறியாமை அடங்கிய அறிக்கை வெளியிடும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.,சுக்கு கண்டனம்.
கலைஞர் நூலகத்தை தடுத்து விடலாம் என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., கனவிலும் கூட நினைத்து விட வேண்டாம்; மதுரை மாநகரில் கலைஞர் நூலகம் கம்பீரமாக எழும். மாறி மாறி பொதுப்பணித் துறை அமைச்சர்களாக இருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.,சுக்கு பென்னிக்குவிக் வரலாறும் தெரியவில்லை; அவரது நினைவிடமும் தெரியவில்லை. கர்னல் பென்னிகுவிக்கிற்கு சிலை வைத்து அழகு பார்த்தவர் கருணாநிதி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
– மா.மச்சராஜா