தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். வாக்குப்பதிவு நடந்த அதே தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் – ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிடுகிறது.
சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிடுகிறார்
இரு அணி சார்பிலும் போட்டியிடக் கூடியவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பரபரப்பு பேட்டிகளும் கொடுத்தார்கள்.
பாண்டவர் அணியை சேர்ந்த தலைவர நாசருக்கு வேட்புமனுவில் முன் மொழிந்து வாழ்த்து கூறியிருக்கிறார் கமல்ஹாசன். கடந்த முறை தேர்தலின் போதும் நாசருக்கு முன் மொழிந்தது கமல்ஹாசன் தான்.
ஆனால் கடந்த முறை பாண்டவர் அணியை தாங்கி பிடித்த ஐசரி கணேஷ் இந்த முறை தன் தலைமையில் ஒரு அணியை உருவாக்கி சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பேரையும் வைத்து தலைவராக பாக்யராஜ், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும் போட்டியிடுகிறார்கள்.
வேட்புமனு மனுத்தாக்கல் முடித்து திரும்பியதும் செய்தியாளர் சந்திப்பில் “தலைவர் பதவிக்கு நிற்கும் படி ரஜினிகாந்த் சொன்னதால் தான் நான் போட்டியிடுகிறேன்” என பாக்யராஜ் சொல்லிவிட்டு போக திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
விஷால் அணியை கமல்ஹாசன் ஆதரிக்கிறார் என்பதால் ஐசரி கணேஷ்-பாக்யராஜ் அணியை ரஜினிகாந்த் ஆதரிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினிகாந்த் இப்போது மும்பையில் தர்பார் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். ரஜினி சொன்னதால் தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக பாக்யராஜ் அறிவித்திருப்பதால், பாக்யராஜ் தொலைபேசியில் ரஜினியிடம் பேசினாரா? அல்லது பாக்யராஜிடம் ரஜினிகாந்த் பேசினாரா எனபது குறித்து விசாரித்த போது மும்பையில் ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினிக்கு இயக்குனர் பாக்யராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்தும், தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்தும் தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. அப்போது இயக்குனர் பாக்யராஜுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த வாழ்த்தை தொடர்ந்து ரஜினி சொல்லித்தான் தான் தேர்தலில் போட்டியிடுவதாக பாக்யராஜ் சொல்லியிருப்பது குறித்து ரஜினி தரப்பில் விளக்கம் வரும் என கூறப்படுகிறது.
எது எப்படியோ கமல் ஒரு அணியை பகிரங்கமாக ஆதரிப்பது போல ரஜினி பகிரங்கமாக பாக்யராஜ் அணியை ஆதரித்து அறிக்கையோ பேட்டியோ அவர் பாணியில் வீடியோவோ வெள்யிடாதவரை ரஜினி ஆதரவு தகவல்… பாக்யராஜ் சொன்ன தகவலாக தான் இருக்கும்.
அதோடு ஏற்கனவே பதவியில் இருக்கும் பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்த பாக்யராஜ்- & ஐசரி அணிக்கு பாண்டவர் அணி மீது வலுவான குற்றச்சாட்டு எதையும் சொல்ல முடியாததால் கட்டடம் தாமதமாகிவிட்டது என்று ஒன்றுக்கும் உதவாத காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.
இதில் வேடிக்கையே கட்டடம் தாமதமானதற்கு காரணம் எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கு. அதையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டு இப்போதும் கட்டட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற அனைவரும் நடிகர் சங்க புது கட்டட பணியை பார்க்காமல் இருந்திருக்க முடியாது.
கடந்த முறை தேர்தலில் முறைகேடு புகார்களில் சிக்கி பதவியை இழந்த ராதாரவி இந்தமுறை சத்தமில்லாமல் ஐசரி கணேஷ் அணிக்கு வேலை செய்கிறார். நாடக நடிகர்களை ஒருங்கிணைப்பு செய்கிறேன் என்று சொல்லி விட்டு ஐசரி கணேஷ் உபயத்தில் ஊர் ஊராக பயணப்பட்டு தன்னை வளப்படுத்திக் கொள்ளும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் ராதாரவி.
விஷாலுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் பாக்கியராஜ் அணியினர் குறித்து நாடக நடிகர்கள் சிலர் நம்மிடம் கூறுகையில், ராதாரவி ஏற்கனவே நடிகர் சங்கத்தில் பொருப்பில் இருந்தபோது சங்கத்தின் இடத்தை முறைகேடாக விறப்னை செய்த விவகாரத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவோம் என்பதை அறிந்ததும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். என்னதான் ஆளும் கட்சியில் இணைந்தாலும் தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் சமீபத்திலேயே நாம் பார்த்திருக்கிறோம். அடுத்தது தலைவராக போட்டியிடும் பாக்கியராஜ், இவர் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றதாக சான்றுகள் இல்லை. குடும்ப அரசியல் பற்றியெல்லாம் பேசும் இவர் தலைவர் பதவிக்கும், இவர் மனைவி பூர்ணிமா செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். மிஸ்கின் இயக்கும் சைத்தான் படத்தில் இவரது மகனை கதாநாயகனாக நடிக்க வைப்பதாக இருந்தது. அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு விஷால் தான் காரணம் என்று நினைத்து விஷாலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுகிறார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேஷ் ஏற்கனவே பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையில் பொறுப்பில் இருந்தபோது முறைகேடு புகாரில் சிக்கி இரண்டு மாத காலம் சிறையில் இருந்துள்ளார். அதன்பிறகு கல்வித் தந்தையாக தன்னை காட்டிக் கொண்டு வலம் வருகிறார். சமீபத்தில் கூட தியாகராயநகரில் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்த வீட்டை முறைகேடாக அபகரிக்க முயன்றபோது பிரச்சனை ஏற்பட்டு பாண்டிபஜார் காவல்நிலையத்தில் இவர் மீதும் CSR போட்டிருக்கிறார்கள். விஷாலை எதிர்த்து புதிதாக எந்தக் குற்றச்சாட்டிற்கும் உள்ளாகாத நபர்கள் ஒரு அணியாக நின்றால் பரவாயில்லை. புதியவர்கள் அவர்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்று யோசனை செய்யலாம். ஆனால் இப்போது விஷாலை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் பல்வேறு புகார்களில் சிக்கியவர்கள். இவர்கள் எப்படி சங்கத்தையும், எங்களையும் காப்பாற்றப் போகிறார்கள். விஷால் அணியினரே மீண்டும் வந்தாலாவது சங்கத்தின் கட்டிடத்தையாவது விரைவில் முடிப்பார்கள் என்று தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்கள்.
தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளில் இருக்கும் உள்கட்சி அரசியலை விட நடிகர் சங்கத்தில் பரபரப்பான உள்குத்து அரசியல் களை கட்டி வருகிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க இந்த திரைத்துறை அரசியல் சூடு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
எது எப்படியோ இரண்டு அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் இருக்கிறார்கள். ஐசரி கணேஷ் பணத்தை தண்ணீராக செலவு செய்து வருகிறார். இரு அணியினரில் பாக்கியராஜ் அணியினர் வெற்றி பெறுவார்களா? விஷால் அணியினர் தங்கள் பதவியை தக்க வைப்பார்களா? என்பதை அறிய நாமும் ஆவலுடன் காத்திருப்போம்.
— கோடங்கி