60 வருடங்களில் கிடைக்காத வெற்றி..! உற்சாகத்தில் “விக்ரம்” படக்குழுவினர்
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு இதுவரை அவர் கண்டிராத வெற்றியை “விக்ரம்” படம் கொடுத்துள்ளது. படம் வெளியான நாள் முதல் தற்போது வரை திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. படம் வெளியான ஐந்து நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது தமிழகத்தில் 82 கோடி ரூபாயை வாரிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, இந்தி என படம் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிகிறது. வெளிநாடுகளில் மட்டும் சுமார் 90 கோடி ரூபாய் வசூல் பார்த்துள்ளது விக்ரம். தனது திரையுலக வாழ்வில் இப்படி ஒரு வசூலைப் பார்த்திராத கமல் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இதனால் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கி தனது தாராள மனதை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யா கதாப்பாத்திரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டிற்கே சென்று அவருக்கு 35 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசாக வழங்கி மகிழ்ந்தார் கமல்.
இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக உழைத்த படக்குழுவினர், விநியோகஸ்தர்களை அழைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, விருந்துக்கு ஏற்பாடு செய்து அவர்களோடு அமர்ந்து உணவருந்தி உற்சாகப் படுத்தியுள்ளார் கமல். இந்த விருந்து நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.