பெப்சி தலைவருக்கு கடுமையான எதிர்ப்பு !.? தயாரிப்பு நிர்வாகிகள் ஆவேசம் !
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நாளை காலை நடைபெற உள்ளது.
இந்த சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு நடைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட இருப்பதால், தற்போதைய நிர்வாகிகள் தேர்தல் நடத்தாமல் பதவியை நீட்டிக்க முயற்சி செய்வதாக உறுப்பினர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த முயற்சிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதால், திரைப்பட தொழிலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் செல்வமணியை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து, தேர்தலை தள்ளிவைக்க பேச வைக்கலாம் என நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அவர் பேசினால்தான் தயாரிப்பு நிர்வாகிகள் பயப்படுவார்கள். நாமும் சில காலம் தேர்தல் நடத்தாமல் பதவியை நீட்டித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாக உறுப்பினர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இந்த தகவல் தெரிந்ததும் நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், சங்கத்தின் உறுப்பினர்களுக்குள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டுமே தவிர, உறுப்பினர் அல்லாத வேறு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பெப்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள எந்தவித உரிமையும் இல்லாத நிலையில், எப்படி கலந்து கொள்ள முடியும் என உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் பெப்சி தலைவர் உறுபினராக உள்ள இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், மற்ற சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, தேர்தலை தள்ளி வைக்க அறிவுறுத்தினால் அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் அனுமதிப்பார்களா ? செல்வமணிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ? நாளைய தினம் நமது பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வமணி வந்தால், கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.