தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
இந்திய மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, செயலிழந்து வரும் அரசுக் கட்டுமான அமைப்புகள் அனைத்தின் மீதும் மக்கள் அடியோடு நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதனால்தான் “யார் ஆட்சிக்கு வந்தாலும், எதுவும் செய்துவிட முடியாது.“ என்கிறார்கள்.
சமூக ஒழுக்கம், சமூக நியதி, ஆக்கப்பூர்வமான திட்டங்கள், நேர்மறைக் கொள்கைகளுக்குப் பதிலாக வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் மோசடிகள், கிரிமினல்மயமாதல் தாம் அவர்களிடம் உள்ளன. கிரிமினல் குற்றக் கும்பல்கள் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் கார்ப்பரேட் தரகு முதலாளிகள் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது.
பயங்கரவாத, பிரிவினைவாத, பீதி கிளப்பப்பட்டு மக்களுக்கு எதிராகக் கடுமையான பெருந்திரள் கண்காணிப்பும், அடக்குமுறைகளும் ஏவி விடப்படுகின்றன. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், அதிகார வர்க்க இலஞ்ச ஊழல் அத்துமீறல்கள், போலீசு அக்கிரமங்கள் அராஜகங்கள், நீதித்துறை முறைகேடுகள், ஊழல்கள், அவற்றின் பிற சமூகவிரோத குற்றங்கள், மொத்த அரசமைப்பும், சமூகமும் கடும் நெருக்கடியில், சிக்கி நொறுங்கி சரிந்து வருவதை குறிக்கின்றன. பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அவற்றை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.
தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் அடங்கிய புதிய தாராளவாதக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், சமூக ஒழுக்கம், சமூகப் பொறுப்பு போன்றவற்றைப் பேசுவதெல்லாம் முட்டாள்தனம் என்ற கருத்து பரப்பப்படுகிறது. சுயநலம், இலாபவெறி, நுகர்பொருள் மோகம், வரைமுறையற்ற இன்பநாட்டம், சொகுசு வாழ்க்கை, தனிமனிதப் பேராசை பாலியல் வக்கிரங்கள், போதை வாழ்க்கை, கிரிமினல் குற்றக் கும்பல் வாழ்க்கை, சாதி மதவெறி போன்ற சமூகக் குற்றங்கள் ஆகியவை பன்மடங்கு பெருகி விட்டன. கொலை, கொள்ளை, வழிப்பறி ஆள்கடத்தல், கூலிக்குக் கொலை ஆகிய சமூக விரோதக் கிரிமினல் குற்றங்களையே ஒரு முறையான தொழிலாகக் கொண்ட விலங்குகள் வாழும் காடு போல நாடும், சமூகமும் மாறி வருகிறது.
அரசே தனது வருவாய்க்குரிய வழிமுறையாக, இலக்கு வைத்து சாராய வியாபாரம் நடத்தி, மக்களை குடிகாரர்களாக்கி வருகிறது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், நிச்சயமற்ற உதிரித்தனமான தொழில்கள் (புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவாக உதிரித்தனமான தொழில்கள் அதிகரித்து வந்தன) ஆகியவை காரணமாக 15-25 வயது வாலிபர்களில் கணிசமான பேர் குடிகாரர்களாக, காமாந்தகர்களாக, கூலிப்படையினர்களாக மாறிவருகின்றனர். இதனால் சமூக விரோதக் குற்றங்கள் ஏராளமாக வெடிக்கின்றன. சமூக விழுமியங்கள் சீரழிவதும் சமூகக் கட்டுமானங்கள் நொறுங்கிப் போவதும் பெருமளவு நடக்கின்றன. இவையெல்லாம் சுனாமி போல சிவில் சமூகத்தை சூழ்ந்து, சர்வ நாசமாக்கி வருகின்றன. இந்த நிலைமைகளைக் கண்டு அலறும் எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டதாகக்கூறி போலீசையும் பெருந்திரள் கண்காணிப்பையும் அதிகரிக்கக் கோருகின்றனர். உண்மையில் இது, ஒரு கன்னத்தில் அறையும் ஒடுக்குமுறை அரசிடமும் ஆட்சியாளர்களிடமும் மறு கன்னத்தைக் காட்டுவதாகும்.
இந்த நிலைமை எதைக் காட்டுகின்றது? நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிக மிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.
அரசுக் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றவில்லை. அவை, திவாலாகி, தோற்றுப்போய், நிலை குலைந்து, எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்டன. நாட்டிலுள்ள அரசுக் கட்டுமான அமைப்புக்கள் அனைத்தும், மேலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சீரழிந்து சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டன. ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே நாட்டுக்கும், மக்களுக்கும் வேண்டாத சுமையாகிப் போய்விட்டது. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?
நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்ச நிலையை எட்டிவிட்டது. மீள முடியாத இத்தகைய நெருக்கடிக்குள் நமது நாட்டைத் தள்ளியுள்ள அரசும், ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கங்களும், அரசு அதிகாரத்தில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டன. அவற்றால் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் கூடத் தீர்வுகாண முடியவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தராத, மக்களின் உரிமைகளை மறுக்கும், மக்களின் எதிரிகளுக்கு சேவை செய்கின்ற அவை, அதிகாரத்தில் நீடிக்கும் அருகதையற்றவை. இவற்றை நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு சவால் விடவும் மக்கள் ஒன்று திரள வேண்டும்.
நாட்டின் எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு நெருக்கடிக்கும் தீர்வாக, அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான, உண்மையில் ஜனநாயகத் தன்மையுடைய மாற்று அரசுக் கட்டமைப்பை நிறுவிக்கொள்ள வேண்டும். மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, அதற்குப் பொருத்தமான ஒரு பொது அமைப்பைக் கட்டி, பொது முழக்கங்களை வகுத்து, பொது இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் புதிய, சரியான, அவசியமான, அரசியல் கடமையாகும்.
அதை விட்டுத் தனித்தனிச் சிக்கல்களுக்குத் தனித்தனித் தீர்வுகளையும் கோரிக்கைகளையும் முழக்கங்களையும் முன்வைத்து, தனித்தனி இயக்கங்களுக்கும் மக்கள் திரண்டால் போதாது. ஆகவே, எல்லாச் சிக்கல்களுக்குமான, கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக, மக்களே அதிகாரத்தை கைப்பற்றும் இயக்கமாக “மக்கள் அதிகாரம்” என்ற புதிய, சரியான, அவசியமான, அரசியல் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் மக்களின் பொறுப்பும் மக்களின் கடமையுமாக இருக்கிறது.
தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகார வர்க்க – போலீசு நிர்வாக அமைப்புக்கும் மாற்றாக அவற்றுக்கு வெளியே, நேரடியாக மக்கள் பங்கேற்கும் அதிகார, நிர்வாக அரசியல் அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும். மக்களுக்காக யாரோ சிலர் அரசு நிர்வாகம் உட்பட ஏதாவது நல்லது செய்வார்கள் என்று பொறுப்புக்களை ஒப்படைக்க முடியாது. மக்களே நேரடியாக அரசு நிர்வாகத்தை நடத்தவும், அதை மக்களே கண்காணித்து தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் முறைகள் வேண்டும்.
அதிகாரம் பற்றிய பிரச்சினை – அது யாரிடம் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அது மக்களிடம்தான் இருக்க வேண்டும்.
அரசியல் கட்டமைப்பு நெருக்கடியால் எழும் பிரச்சினைகளுக்கு தேர்தலை இன்னமும் ஒரு தீர்வாக ஆட்சியாளர்கள் நம்பச் சொல்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்று பேசுகிறார்கள். ஆனால், தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தேர்தல் தீர்வு அல்ல.
தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் நடத்தப்படும் சுரண்டலும் ஒடுக்குமுறையும்தான் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், அதுவே தேசபக்தி என்ற சித்தாந்தம்தான் இந்த அமைப்பில் கோலோச்சுகிறது. எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் தனிவுடைமையை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் நாட்டை மறுகாலனியாக்கும் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் சேவை செய்பவைதான்.
எனவே, இப்படிப்பட்ட கட்டமைப்புக்குள் நமக்கான தீர்வு கிடையாது. கட்டமைப்புக்கு வெளியில்தான் தீர்வு இருக்கிறது. கட்சிகளை மாற்றுவதால் தீர்வு வராது. கட்டமைப்பையே மாற்றுவதுதான் தீர்வு. தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புக்கு வெளியே, முற்றிலும் வேறான மாற்று அரசியல் கட்டமைப்புதான் நாட்டுக்குத் தேவை. ஒரு மாபெரும் புரட்சியின், ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் நிறுவப்படும் மக்கள் அதிகாரம்தான் அதற்கு தீர்வுகாணமுடியும், என்கிறோம் நாம்.
போலீசு, நீதித்துறை, அதிகார வர்க்கம், ஊடகங்கள், கட்சிகள் என அனைத்து துறைகளிலும், தனது ஆட்களை புகுத்தி பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு ஏற்ப, இந்தக் கட்டுமானங்களை தனக்கேற்ற வகையில் மாற்ற வெறித்தனத்துடன் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ். கார்ப்பரேட் காவி பாசிச சக்திகள். இந்த அபாயத்தை எதிர்ப்பதாக சொல்லும் காங்கிரசு பாதி இந்துத்துவாவாக – மிதவாத இந்துத்துவாவாக உள்ளது. இத்தகைய பாசிச அபாயத்தை முறியடிக்க வேண்டுமானால் அவர்களை முந்திக் கொண்டு நமக்கான மக்கள் அதிகாரக் கட்டமைப்பை நிறுவுவது அவசர அவசியப் பணியாக நம்முன்னே உள்ளது.
– சி.ராஜூ, மக்கள் அதிகாரம்