ஆளுநரின் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மீண்டும் அமைக்கப்படுமா ?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவையில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்பிறகு பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி பழனி நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டது.
விழா காலங்களில் மட்டுமல்லாமல் நாள்தோறும் பழனியில் மக்கள் கூட்டமும், போக்குவரத்து நெருக்கடியும் நிறைந்தே காணப்படும். ஆளுநர் வந்து சென்று பல நாட்களாகியும் அகற்றப்பட்ட இடங்களில் இதுவரை வேகத்தடை அமைக்காததால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியுள்ளது. மேலும் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கி வருவதால் பல இடங்களில் சிறிய அளவிலான விபத்துகள் நடக்கின்றன.
இது சம்பந்தமாக பழனி நகராட்சி ஆணையர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் , போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடத்தில் விரைவாக வேகத்தடை அமைத்து பெரிய அளவிலான வாகன விபத்துகளை தடுப்பதோடு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.