கழிப்பிட பகுதியில் நியாயவிலைக் கடை ! தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ! அச்சத்தில் பொதுமக்கள் !
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்காரபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல், தான்தோன்றித்தனமாக பேரூராட்சி தலைவர், கழிப்பிட பகுதியில் நியாயவிலை கடை கட்டியதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுசம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில், நெய்காரபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில், கடந்த ஆண்டு பழனி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 8 லட்சம் செலவில் நியாய விலைக் கட்டிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த கட்டிடத்தில் கிராமத்தில் உள்ள 1200 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒரே இடத்தில் பொருட்கள் விநியோகம் செய்யமுடியாத காரணத்தால், 600 குடும்பங்களுக்கு அந்த கட்டிடமும், மீதமுள்ள 600 குடும்பங்கள் பொருட்கள் வாங்குவதற்கு புதிய கட்டிடம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு, இடம் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
புதிய இடம் தேர்வு செய்வதில் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன், ஆளும்கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்காமல், அப்பகுதியினர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் இடத்தை தேர்வு செய்து கட்டிடத்தை கட்டி முடித்துள்ளார். இந்நிலையில் அந்தக் கட்டிடத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வந்துள்ளார்.
புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கட்டிடத்தில் விற்பனையாளர், பொருட்கள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் என அனைவரும் துர்நாற்றம் தாங்காமல் முகத்தை மூடிக்கொண்டே வந்து செல்கின்றனர். மேலும் அந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்காததால், கைரேகை பதிவு, பொருட்கள் அளவீடு செய்வதில் தாமதம் ஏற்படாடுகிறது. மனித கழிவுகளின் துர்நாற்றத்தில் நீண்ட நேரம் நிற்கமுடியாமல் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
ஆகையால் பொதுமக்கள் பயன்படுத்தும் நியாய விலைக் கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிப்பதோடு, நியாயவிலை கடைக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சாதிக் பாட்சா