தமிழகம்

ஒரு புகார் மனுவுக்கு 15 லட்சம் கேட்டு, வியாரியை மிரட்டும் நிழல் உலக தாதா !.?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி என் ஜி ஆர் சாலை பிரபல வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி. பல ஆண்டுகளாக பல்லடம் பேரூராட்சியாக இருந்த காலத்திலிருந்தே, என் ஜி ஆர் சாலையில் உள்ள வணிக கட்டிடங்கள் கட்டிடஅனுமதி பெற்று கட்டப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து 2010 ஆம் ஆண்டு நகராட்சியாக பல்லடம் தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வரன்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பார்ப்பதற்கு அப்பாவி போல் தோற்றமளிக்கும் பல்லடத்தை அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேவராயம்பாளையத்தை சேர்ந்த அமமுக வின் மாவட்ட அவைத்தலைவர் பி. மூர்த்தி என்பவர் பல்லடம் என் ஜி ஆர் சாலையில் உள்ள பிரபல அன்னை ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் பார்க்கிங் வசதி குறித்தும், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நெருக்கடி ஏற்படுவது குறித்தும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்துள்ளார். பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் பெரும் உரிமைச்சட்டத்தின் கீழ் அன்னை ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் வரைபடம் குறித்தும் அனுமதி குறித்தும் பி. மூர்த்தி நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் கேட்டுள்ளார்.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அன்னை ஸ்டோர்ஸ் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே அன்னை ஸ்டோர்ஸ் அமைந்திருக்கும் இடம் 5 பேருக்கு சொந்தமானது எனவும், 5 பங்கில் தனித்தனியாக கடந்த 2004 ஆம் ஆண்டு  அன்றைய பல்லடம் பேரூராட்சியில் கட்டிட அனுமதி பெற்று கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மேற்படி கட்டிடம் தொடர்பாக அன்றைய ஆணையர் முன்னிலையில் ஆஜராகியபோது தனி நபரிடம் நேரில் ஆஜராகத்தேவையில்லை என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி மேற்படி பி. மூர்த்தி நகராட்சி அதிகாரிகளிடம் அன்னை ஸ்டோர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்னை ஸ்டோர்ஸ் உரிமையாளர்களின் ஒருவரான சந்தராஜ் என்பவரை அழைத்த நகராட்சி அதிகாரி மூர்த்தியை நேரில் சந்தித்து பேசி சமாதானப்படுத்திவிட்டு புகாரை வாபஸ் பெறுவதாக எழுதி வாங்கி வரும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதனிடையே தேவராயம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தியிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பெட்டிசனை வாபஸ் வாங்க ரூ. 15 லட்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னிட்டு 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய மூர்த்தி வீட்டில் இருந்தபடியே சுந்தராஜின் நண்பர் கதிர் என்பவரிடம் தொடர்புகொண்டுள்ளார். இதனை அடுத்து கதிருடன் தேவராயம்பாளையம் சென்ற சுந்தராஜ் மூர்த்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தனது நிறுவனத்தின் கட்டிட அனுமதி குறித்தும், பார்க்கிங் வசதி குறித்தும் மூர்த்தியிடம் விளக்கமாக கூறிதாக கூறப்படுகிறது.

இதனை ஏற்காத மூர்த்தி ரூ. 15 லட்சத்திற்கு ஒரு பைசா குறைந்தாலும் பெட்டிசனை வாபஸ் வாங்க மாட்டேன் என்றும், மேலும் இந்த தொகையில் மேலும் முக்கிய இரண்டு நபர்களுக்கும் பங்கு தரவேண்டும் என்வும் கூறியுள்ளார். பின்னர் ரூ. 20 ஆயிரத்தை டோக்கன் அட்வான்சாக பெற்றுக்கொண்டுள்ளார். இதனிடையே பணம் கொடுக்க மனமில்லாத சுந்தராஜ் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டும் மூர்த்தி குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புகார் அளிக்க பல்லடம் தாலுக்காவை சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்திருந்தனர். அப்போது பேசிய பல்லடம் தாலுக்கா வியாபாரிகள் சங்க செயல் தலைவர் பழனிச்சாமி கூறும் போது , அன்னை ஸ்டோர்ஸ் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் நபர் மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்கங்களின் திருப்பூர் மாவட்ட செயலாளர் லாலா கணேசன் கூறும்போது, அன்னை ஸ்டோர்ஸ் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியது கண்டிக்கத்தக்கது எனவும், உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் மூர்த்தி போன்றவர்களின் மிரட்டல் தொடர்ந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட ஆலோசகர் ஆ.அண்ணாதுரை கூறும்போது, மூர்த்தியின் மிரட்டலுக்கு நகராட்சி நிர்வாக திறமையின்மையின் காரணமாக இது போன்ற பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் நடைபெற்றுகொண்டிருக்கிறது. தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோருபவர்களுக்கு எழுத்துப்பூர்வமாகத்தான் தகவல் அளிக்கவேண்டும். அதற்கு மாறாக மூன்றாம் நபரை அழைத்து தகவல் கோருபவரிடம் சமாதானம் பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள் என நகராட்சி நிர்வாகத்தினர் கூறுவதன் காரணமாக இது போன்று வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் நடந்துவருகிறது. பல்லடம் என் ஜி ஆர் ரோட்டில் 300 க்கும் மேற்பட்ட வணிக கடைகள நகராட்சி அமைத்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் மேற்கண்ட கடைகள் முன்பாக பார்க்கிங் வசதி செய்து தராத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வணிகர்கள் வியாபாரம் செய்யமுடியாத நிலை உள்ளது. இதை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளை மிரட்டும் நிலைக்கு இட்டுச்சென்றதை கண்டிப்பதாக கூறினார்.

இந்நிகழ்வில் பல்லடம் அனைத்து வணிகர் சங்கங்கங்களின் தலைவர் கண்ணையன், பல்லடம் தாலுக்கா வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தா ஸ்டோர்ஸ் செல்வராஜ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ,பல்லடம் அனைத்து வணிகர் சங்கங்களின் இணை செயலாளர் பச்சாபாளையம் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button