மேயரின் அநாகரிக செயல்..! : அதிர்ச்சியில் பொதுமக்கள்…
நகராட்சியாக இருந்த காரைக்குடி, மாநகராட்சியாக மாறிய பின்பு நடந்த முதல் மாமன்ற கூட்டத்திலேயே எதிர்க்கட்சி கவுன்சிலரிடமும், செய்தியாளர்களிடமும் மேயர் முத்துதுரை அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் முக்கியமான நகரமான காரைக்குடி, சமீபத்தில்தான் தமிழக அரசால் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், இன்னும் மாநகராட்சிக்கு உரியக் கட்டமைப்புகள் உருவாக்கப்படாத நிலையில், எல்லைகள் வரையறுக்கும் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்காததால் மாநகராட்சியுடன் இணைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஊராட்சிகள், பேரூராட்சி நிர்வாகங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இச்சூழலில் அவசர அவசரமாக கடந்த 9-ஆம் தேதி அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலையில் நடந்த விழாவில் கருப்பு அங்கி அணிந்து, நன்கொடையாளர்கள் வழங்கிய 101 பவுன் தங்க சங்கிலியையும் அணிந்து செங்கோல் சகிதமாக சேர்மனாக இருந்த முத்துதுரை மேயராக மாறினார். கூடவே துணை சேர்மன் குணசேகரனும் துணை மேயராக்கப்பட்டார்.
இந்த விழாவினால் காரைக்குடி நகரமே குலுங்கும் அளவுக்குப் பார்க்கும் இடமெல்லாம் முத்துதுரை சிரிக்கும் பிளக்ஸ் போர்டுகளை அமைத்து, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையை மறித்து பெரிய பந்தல் அமைத்து நடந்த இந்த பதவி ஏற்பு விழாவால் நகரமே ஸ்தம்பித்தது.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், “காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்க மட்டும்தான் செய்துள்ளது அரசு. அதற்கான பூர்வாங்க பணிகள் இன்னும் தொடங்கவில்லை. கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகளும், 5 ஊராட்சிகளும் இணைவதற்குச் சம்மதிக்கவில்லை. முழு மாநகராட்சியாக மாற இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் மேயர் பதவியேற்பு விழா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், மாநகராட்சி விழா என்ற பெயரில் நடத்தி அதில் சேர்மன் முத்துதுரை மேயராக பொறுப்பேற்றிருக்கிறார்.
அப்படியென்றால் இவருடைய மேயர் அதிகாரம் எந்த ஊர் வரை உள்ளது? இணைக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு பேரூராட்சி, ஐந்து ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா என்று மாவட்ட நிர்வாகம் தெளிவாகச் சொல்லவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர், காரைக்குடி ஆணையருக்கு ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டும் சரியான பதில் வரவில்லை. இந்நிலையில் அவசர அவசரமாக விதிகளை மீறித் தேர்தல் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி மேயராக முத்துதுரை பொறுப்பேற்றுள்ளார். இது சட்டப்படி சரியா என்பதை மக்கள் அறிந்துகொள்ள உயர் நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சர்ச்சை ஒருபக்கம் தொடர்ந்துகொண்டிருக்க, சமீபத்தில் நடந்த மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் முகம் சுழிக்க வைத்துள்ளது. மேயர் அங்கி அணிந்து முத்துதுரை கலந்துகொண்ட முதல் மாமன்றக் கூட்டத்தில் 27வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ், “கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க மாநகராட்சி சார்பில் பணியமர்த்தப்பட்ட 80 ஊழியர்களுக்குத் தலா 350 ரூபாய் ஊதியமாக வழங்கிவிட்டு, 702 ரூபாய் கொடுத்ததாகக் கணக்கு காண்பித்து, 3 மாதத்தில் 48 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விளக்கம் வேண்டும்” என்று கேட்க,
அப்போது அங்கிருந்த முத்துதுரையின் தீவிர ஆதரவாளரான தி.மு.க., கவுன்சிலர் சித்திக் என்பவர் பிரகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருவருக்கொருவர் ‘போடா.. வாடா..’ என ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, மேயர் முத்துதுரை குறுக்கிட்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷை பார்த்து “வெளியே போயா” என்று ஒருமையில் பேசியது மட்டுமின்றி, ‘உன்னை சஸ்பெண்ட் செய்து விடுவேன்’ என்றும் கூறியது அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது.
இந்த களேபரம் நடந்து கொண்டிருக்கும்போது இதைக் கவனித்துக்கொண்டிருந்த செய்தியாளர்களைப் பார்த்து, “இனிமேல் எங்களுக்குச் சாதகமாகச் செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் அழைப்பு கொடுப்போம். எங்களுக்கு எதிராகச் செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு இனி அனுமதி இல்லை. அவர்களுக்கு எந்த தகவலும் கொடுக்க மாட்டோம்” என்று மேயர் பேச, வெகுண்டெழுந்த செய்தியாளர்கள், “எங்கள் கடமையைத்தான் செய்கிறோம். பத்திரிகையாளர்களைப் பற்றி இங்குப் பேச வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாரும் உங்களிடம் வந்து எதற்காகவும் நிற்கவில்லை” என மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
மேயரின் இந்த செயல், சில தி.மு.க., கவுன்சிலர்களையும் ஆத்திரப்பட வைத்துள்ளது. அநாகரிகமாக நடந்துகொண்ட மேயர் முத்துதுரையின் செயல் சமூக ஊடகங்களில் பரவியதால் காரைக்குடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க., பெண் கவுன்சிலரிடம் மரியாதை குறைவாகப் பேசியதாக மேயர் முத்துதுரை மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.