நாற்காலி செய்தி எதிரொலி..! துணை ஆணையர் அதிரடி மாற்றம்…
கோவை மாவட்டத்தில் முருகப்பெருமானின் திருத்தலங்களில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு துணை ஆணையராக பணியாற்றிவரும் திருமதி வர்ஷினி தலைமையிலான நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாகவும், துணை ஆணையருடைய வாகனத்தின் தற்காலிக (ஆக்டிங் டிரைவர்) ஓட்டுநர் அசோக் என்பவர் கோவிலில் நிர்வாகத்தில் தலையிட்டு பணியாயாளர்களை மிரட்டி வேலை வாங்குவதாக வந்த தகவலையடுத்து, கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள், வியாபாரிகள் மற்றும் அப்பகுதியினர் கூறிய தகவல்களை கடந்த மார்ச் மாத இதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மேலும் விசாரணை செய்தபோது… கோவிலின் இணை ஆணையர் தான் பணிபுரியும் இடத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிற்குள் தங்கியிருந்து பணிபுரிய வேண்டும் என விதிகள் இருக்கும்போது, இவர் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு அரசு வாகனத்தில் சென்று வருகிறார். அரசு வாகனத்தில் உடுமலைப்பேட்டைக்குச் சென்று வருவதற்கு யாரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்? அதற்கான எரிபொருள் செலவுகளை எந்தக் கணக்கில் எழுதுகிறார் என்றும் தெரியவில்லை. அரசாங்க வாகனத்தை ஓட்டுவதற்கு அரசால் நியமிக்கப்பட்ட ஓட்டுநர் பணிநியமனம் செய்யப்பட வில்லையா? அரசாங்க வாகனத்தை இயக்குவதற்கு துணை ஆணையர் திருமதி வர்ஷினி பயண்படுத்தும் தற்காலிக ஓட்டுநர் (ஆக்டிங் டிரைவர்) அசோக் என்பவருக்கு அரசு சிறப்பு அனுமதி ஏதும் வழங்கி இருக்கின்றனரா? என பல்வேறு கேள்விகளை அடுக்குகினர்.
மேலும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் அனுமதியோடு நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர்கள் குழு, இது எதையுமே கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ! துணை ஆணையர் திருமதி வர்ஷினியின் அலுவலகத்தில் எந்நேரமும் (ஆக்டிங் டிரைவர்) அசோக் இருந்துகொண்டு பணியாளர்களை மிரட்டி வேலை வாங்குவதை அறங்காவலர்கள் குழு தலைவர் ஜெயக்குமார், வாகன ஓட்டுநருக்கு இங்கு என்ன வேலை என கேள்வி கேட்காமல் இருப்பதன் மர்மம் என்ன? அவருக்கு அதிகாரம் இல்லையா? துணை ஆணையரின் செயல்பாடுகளுக்கு எதிராக அறங்காவலர்கள் குழு நிறைவேற்றிய தீர்மானங்களை, துணை ஆணையர் நிராகரித்ததாகவும், அதற்கு துணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதா என நம்மிடமே வினவுகிறார்கள். அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்து வந்தனர்.
மருதமலை முருகன் கோவிலில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை பக்தர்களை தரிசனத்திற்காக வாகன ஓட்டுநர்களுக்கு பணிச்சுமையை கொடுப்பதோடு, அந்த வாகனம் (மினி பஸ்) பழுதானால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் (ஒர்க்சாப்) பழுது பார்க்கப்படுகிறதா? அதற்கான எரிபொருள் எங்கே நிரப்பப்படுகிறது என்றால், துணை ஆணையர் திருமதி வர்ஷினி எழுதி வைத்திருக்கும் காகிதங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார்கள் ஓட்டுநரும், கடைநிலை ஊழியரும். மேலும் கோவிலின் கடைகள் ஏலம், பஞ்சாமிர்தம், பிரசாதம் விற்பனை என பலவற்றிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க மருதமலை முருகன் கோவில் நிர்வாகத்திற்கு, மதுரை ஆதீனம் தலைமையில் தனியார் அமைப்பு நடத்திய விருது வழங்கும் விழாவில் துணை ஆணையர் திருமதி வர்ஷினி, ஓட்டுநர் அசோக்குடன் (ஆக்டிங் டிரைவர்) கலந்துகொண்டு விருதுகள் வாங்கி வந்துள்ளார். அந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அரசு வாகனத்தில் மதுரைக்கு சென்று வருவதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி சென்று வந்தாரா? இவர்கள் எங்கு தங்கினார்கள், அதற்கான செலவுகள் கோவிலின் செலவுகளில் எழுதப்பட்டுள்ளதா? அல்லது சொந்த செலவில் அரசு வாகனத்தை மட்டும் பயண்படுத்தினாரா?
கோவிலின் பெயரில் விருது பெறுவதற்கு துணை ஆணையர் மற்றும் கோவில் ஊழியர்கள் செல்வதற்கு உயர் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். மதுரை ஆதீனம் விருது வழங்கும் போது துணை ஆணையருடன் அசோக் விருதைப் பெற்றிருக்கிறார். அசோக் அந்த விருதை கோவில் நிர்வாகம் சார்பில் பெற்றாரா?.! அசோக் கோவிலின் ஊழியராக இல்லாதபோது, கோவிலின் சார்பில் விருதைப் பெறுவதற்கு யாரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்.
அறநிலையத்துறை, அறங்காவலர்கள் குழு மதுரை ஆதீனம் வழங்கும் விருது வழங்கும் விழாவில் துணை ஆணையர் திருமதி வர்ஷினி, ஆக்டிங் டிரைவர் அசோக் இருவரையும் கலந்துகொண்டு விருது பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளதா!.? கோவிலின் பெயரில் துணை ஆணையர் திருமதி வர்ஷினி, ஆக்டிங் டிரைவர் அசோக் இருவரும் விருது வாங்கிவந்த விஷயம் இணை ஆணையர் மற்றும் அறங்காவலர்கள் குழுவுக்கு தெரியுமா?.! தெரியாதா?.! போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தள்ளது.
இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் திருமதி வர்ஷினி மீது, இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்த கோவிலின் துணை ஆணையர் திருமதி வர்ஷினி அதிரடியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி வெளியானதும் கோவிலின் அறங்காவலர் குழுவினர், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் பணியாற்றிய காலத்தில் பல்வேறு வகையான முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவை அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு இவர் மீது மேல் நடவடிக்கை தொடருமா? என அப்பகுதியினர் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இருப்பினும் மருதமலை முருகன் கோவிலின் துணை ஆணையர் திருமதி வர்ஷினியை அதிரடியாக மாற்றம் செய்த இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நமது நாற்காலி செய்தி இதழின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.