தங்கும் விடுதி இடிந்து விழுந்ததால் பழனியில் பரபரப்பு ! ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
திண்டுக்கல் மாவட்டம், பழனி மத்திய பேருந்துநிலையம் அருகே பழனி நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. பழனிக்கு முருகனை தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் தங்குவதற்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இந்த விடுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பயண்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் நகராட்சி தங்கும் விடுதியில் அறையின் கழிவறை பகுதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்ததில் யாருக்கும் எவ்வித பாதிப்பும், சேதமும் ஏற்படவில்லை என்றாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் நகராட்சி விடுதியின் கட்டிடப் பராமரிப்பு பணி நடைபெற்றது.
குறுகிய காலத்திலேயே கட்டிடம் இடிந்தது எப்படி.? தரமில்லாமல் பராமரிப்பு செய்த காரணமாகவே கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் பொதுமக்களின் நிலை என்னவாகும் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். நகராட்சி விடுதி கட்டிடத்தின் பராமரிப்பு பணி முறையாக நடந்துள்ளதா ? என நகராட்சி ஆணையர் ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகளிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சாதிக்பாட்ஷா