மாவட்டம்

அர்ச்சகர்கள் துணையோடு காணாமல் போன ஐம்பொன் சிலை !.? தாராபுரம் அருகே பரபரப்பு !

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூரில் உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட கம்பத்தாண்டவர் கோயிலில், சுமார் 8 அடி உயரத்தில், பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்த பணத்தில்  ஐம்பொன்னில் மயில் வாகனம் சிலை செய்துள்ளனர். இந்தக் கோயிலில், நல்லசாமி மற்றும் அவரது மகன் வேதஸ் கந்தமூர்த்தி ஆகிய இருவரும் அர்ச்சகர்களாக வேலை செய்து வருகின்றனர். அர்ச்சகர்கள், கோயிலின் செயல் அலுவலர்,  பணியாளர்கள், டிக்கெட் விற்பனையாளர் ஆகியோர் பொறுப்பில், சோழீஸ்வரர் கோவில் உட்புறத்தில் மயில் வாகனம் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு தை பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விஷேச நாட்களில் மயில் வானத்தை திருவீதி உலா கொண்டு சென்று வந்துள்ளனர். விஷேச நாட்கள் முடிந்ததும், மயில் வாகனத்தை சோழீஸ்வரர் கோவிலில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் பொறுப்பில் ஒப்படைப்பது வழக்கம். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிலை சில நாட்களில் காணாமல் போனதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

இது சம்பந்தமாக அந்த பகுதியில் விசாரணை செய்த போது.. கம்பத்தாண்டவர் கோயிலில் அர்ச்சகர்களாக வேலை செய்து வரும் வேதஸ் கந்தமூர்த்தி , நல்லசாமி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு 20 ஆம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த சுப்பு செட்டியார் மகன் மணிகண்டன், சிதம்பரம் செட்டியார் மகன் குட்டி ( எ ) மோகன்ராஜ், வரதராஜ் ஆகிய மூவரையும் சோழீஸ்வரர் கோவிலுக்கு வரச் சொன்னதாக தெரிகிறது. கோவிலுக்குள் டிக்கெட் விற்பனை செய்யும் அறைக்கு எதிரில் இருந்த மயில் வாகனத்தை, அந்த மூவரிடம் எடுத்து செல்லுமாறு அர்ச்சகர்கள் கூறியுள்ளனர்.

கோவிலில் இருந்த பொறுப்பாளர்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், மயில் வாகனத்தை அந்த மூவரும் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.  அப்போது எடுத்துச்சென்ற மயில் வாகனம் இதுவரை கோவிலுக்குள் வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்‌. இதுசம்பந்தமாக கடந்த 15.07.2024 அன்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதியினர் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் பல லட்சம் மதிப்பிலான மயில் வாகனம் ஐம்பொன் சிலை காணாமல் போய் பல மாதங்களாகியும், இன்று வரை அது எங்கு உள்ளது என கண்டுபிடிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் மயில் வாகனம் போல இன்னும் என்னென்ன காணாமல் போய் உள்ளதோ ? தெரியவில்லை என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தக் கோயிலில் வேலை செய்து வரும் அர்ச்சகர்கள் இருவரும்,  கோயிலை, அறநிலையத்துறை வசமிருந்து விடுவித்து, தனியார் வசம் கொண்டு வருவதற்காக சூழ்ச்சிகள் செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் முன்னாள் அறங்காவலர் கருப்புச்சாமி மறைந்த பிறகு, ஒரு குழுவாக சேர்ந்து இதுபோன்ற தவறான செயல்களில், கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலை காணமால் போனது தொடர்பாக, அர்ச்சகர்கள் வேதஸ் கந்தமூர்த்தி, நல்லசாமி ஆகிய இருவரையும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை செய்தால், மயில் வாகன ஐம்பொன் சிலை தற்போது எங்கு இருக்கிறது என தெரியவரும் என்கிறார்கள்.

மேலும் கோயிலின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அர்ச்சகர்களே மயில் வாகன ஐம்பொன் சிலை காணாமல் போவதற்கு காரணமாக இருந்திருப்பது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– சாதிக் பாட்சா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button