நூறுநாள் வேலை திட்டத்தில் 10 லட்சம் முறைகேடு, ஊராட்சி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை !
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஒன்றியம், பாப்பம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை விட வேலைக்கு வராதவர்களின் பெயர்களை சேர்த்து சுமார் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது நூறு நாள் வேலைத் திட்டத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்தவர், பணியாளர்களின் தினசரி வருகையை பதிவு செய்த பதிவேடுகளில் உள்ள விபரங்களுக்கும், அரசின் TNRD இணையத்தில் உள்ள பதிவிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விளக்கம் கேட்டு பழனி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் குறிப்பானை அனுப்பியுள்ளனர். அதில் அரசுக்கு 9,78,420 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பீட்டு தொகையை நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்தவர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் தலா 25 சதவிகிதம் அரசின் வங்கி கணக்கில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் காவலப்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய ஊராட்சியிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியில், தொகுப்பு எண் -2 ல், அழகர்சாமி கோவில் முதல் மேற்கு மதுரைவீரன் கோவில் வரை நடைபெற்ற தூர்வாரும் பணியில், 112 நபர்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால் அலுவலக தினசரி அறிக்கையில் 141 நபர்கள் பணிபுரிந்ததாக அதன் பொறுப்பாளர் பதிவு செய்திருக்கிறார். பணிக்கு வராத 29 நபர்களின் பெயர்களை அதன் பொறுப்பாளர் பதிவு செய்து முறைகேடு செய்திருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்த பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை சரிசெய்திட பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. நேரடி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு பணிக்கு வராமல் NMMS APP-ல் பதிவுகள் மேற்கொண்ட பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட விவரங்களின் படி தொகையை வசூல் செய்து அரசின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் விபரங்களை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில், தமிழகம் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டால் அரசுக்கு ஏற்படும் நிதி சுமையை ஓரளவாவது சரி செய்யலாம்.
கா.சாதிக்பாட்ஷா