இந்தியாதமிழகம்

புதிய கல்விக் கொள்கை 2020

இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கைக்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இந்த கமிட்டி தாக்கல் செய்த தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ‘புதிய கல்விக் கொள்கை 2020’க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில் முக்கியமானது மும்மொழி கொள்கை. மும்மொழி கொள்கைக்கு ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில், ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாராட்டு தெரிவிப்பது, சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020-ஐ திரும்பப் பெற வேண்டும், புதிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கூடிய பிறகு – உரிய விவாதம் நடத்தி – துறை சார்ந்த நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில் ஆராய்ந்து – ஏற்கனவே உள்ள “சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006”-ஐ மேலும் வலுப்படுத்தும் வகையிலும் -நாட்டில் உள்ள இயற்கை வளங்களுடன் இணைத்து மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் பாதுகாத்திடும் வகையிலும் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் இணைத்து வழங்கப்பட வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி, 3,5,8-ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு, தமிழகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறு வடிவமான தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ள திமுகவின் தீர்மானத்தில், பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய அமைச்சரவையால் 29.7.2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள- “புதிய கல்விக் கொள்கை-2020”-ன் இறுதி வடிவத்தை உடனடியாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்று அ.தி.மு.க. அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்றும் திமுக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு இ-மெயில் மூலம் பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,மும்மொழி கொள்கையில் தாய்மொழி தவிர பிற மொழிகள் விருப்பத் தேர்வுதான். அதனை அந்தந்த மாநிலங்கள், மாணவர்களே தேர்வு செய்யலாம். எந்த மாநிலத்தில் உள்ள மக்கள் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு முதலில் தாய் மொழியில் கல்வி கற்பித்தால் பிற மொழியை கற்கும் திறன் மேம்படும் என தெரிவித்த அவர், முதலில் தாய்மொழியில் எழுத, படிக்க கற்று தந்த பின்னர், 3ஆம் வகுப்பில் இருந்து பிற மொழிகளை எழுதவும், படிக்கவும் கற்றுத் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பல மொழிகள் இருப்பது தேசிய ஒருமைப்பாட்டை வளர்கும். மும்மொழி கொள்கையில் இரண்டு மொழிகள் இந்தியாவை சேர்ந்தவை என்பதால் அவை எளிதாக இருக்கும் எனவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை 2020இல் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. அதில் குறிப்பாக, நாடு முழுவதும் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக வருகிற 2035ஆம் ஆண்டுக்குள் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio – GER) என்பது பள்ளி கல்வியில் இருந்து கல்லூரி படிப்பான உயர் கல்விக்கு செல்லும் 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்களுக்காக கணக்கிடப்படுகிறது.

அதன்படி, 2018-19 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த இந்தியாவுக்கான ஜி.இ.ஆர். விகிதம் 26.3 சதவீதமாக உள்ளது. 2014-&15 ஆம் ஆண்டில் 24.3 சதவீதமாக இருந்த ஜி.இ.ஆர். விகிதத்தை 2035ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த தற்போது புதிய கல்விக் கொள்கை 2020இல் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது 100 பேரில் 26 பேர் மட்டுமே கல்லூரி படிப்புக்கு போகும் நிலையில், அதனை 50 மாணவர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு 2018-&19 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் ஜி.இ.ஆர். விகிதம் 49 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் ஆண்களின் ஜி.இ.ஆர். 49.8 சதவீதமாகவும், பெண்களின் ஜி.இ.ஆர். 48.3 சதவீதமாகவும் உள்ளது. அதேபோன்று உயர்கல்வியில் கேரளாவின் ஜி.இ.ஆர். விகிதம் 37 சதவீதமாகவும், ஆந்திராவில் 32.4 சதவீதமாகவும், கர்நாடகாவில் 28.8 சதவீதமாகவும், குஜராத்தில் 20.4 சதவீதமாகவும் உள்ளது.
அதேபோல், சிக்கிம் மாநிலத்தில் 53.9 சதவீதமாகவும், சண்டிகரில் 50.6 சதவீதமாகவும் உள்ளது. ஆனால், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநிலங்களின் மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் குறைவே. பெரிய மாநிலங்களை பொறுத்தவரை அதிக ஜி.இ.ஆர். கொண்ட முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பீகார், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களில் முறையே 13.6, 18.6, 18.7 சதவீதமாக உள்ளன. மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியாவின் சராசரியான 26.3 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர் கல்வியில் கொண்டுள்ளன.


சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான பரவலான கல்வியறிவு, ஆண் – பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு, இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இவைகளுக்கு முக்கிய காரணமாக இங்கு நிலவி வந்த கடந்த கால அரசியலை கூறலாம். தமிழகத்தின் அரசியலை திசை மாற்றிய நீதிக்கட்சியை தொடர்ந்து, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் பங்கு முக்கியமானது என்றால் அது மிகையாகாது என்கின்றனர் கல்வியாளர்கள்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button