தமிழகம்

தமிழகத்தில் 3 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று..

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தது. முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது ஒரு சில நாட்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

ஆங்காங்கே தொற்று பரவல் அபாயத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டும் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லாத நிலை இருந்தது. இதனால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடந்து வந்தது.


இதனிடையே, தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததால், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. தொடர்ந்து, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்தது.

இதைத்தொடர்து, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் அரியலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், வரதராஜன் பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

இதையடுத்து மாணவிகள் இருந்த வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. வகுப்பறையில் இருந்த மற்ற மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கண்டறியப்பட்ட பள்ளிகளில், மாவட்ட ஆட்சியர் அமுதா ஆய்வு மேற்கொண்டார். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில், மூன்று ஆசிரியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாட்களை ஆகியுள்ள நிலையில், அடுத்தடுத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், “கோவை கேரளாவின் எல்லைப் பகுதியில் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. கேரள எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய 9 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது என கூறினார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து 9 மாவட்டங்களில் 100 % தடுப்பூசி போட கூடுதல் தடுப்பூசி போடுவதற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். 9 மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி போடுவதற்காக அனைத்து நடவடிக்கையும் சுகாதாரத் துறை எடுத்து வருகிறது.

அதேபோல, கேரளாவிலும் மிக சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆனால் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும்  மேல் எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது என்றார். மேலும், தசை சிதைவு போன்ற நோயினால் தமிழகத்தில் 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிப்பதற்கு 16 கோடி செலவாகும் என்று கூறுகிறார்கள் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.

இந்தியாவில் எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 17 வயது 18 வயதிற்குள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசி இருக்கிறோம் அது குறித்த ஆய்வு நடத்தி வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து, அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டது மகிழ்ச்சியான விஷயம் தான் அவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இது பரவாமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

முத்துபாபு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button