மாவட்டம்

98 வயது முதியவரிடம் நிலமோசடி ! பயிர்களை அழித்து அராஜகத்தில் ஈடுபட்ட பிரபல அரசியல் கட்சி பிரமுகர் !

கோவை ஆலாந்துறை அடுத்த போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி கவுண்டர். 98 வயதான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தனக்கு சொந்தமான சுமார் 2 1/2 ( இரண்டரை ஏக்கர் ) நிலத்தின் பெயரில் வங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகைக்காக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து வங்கியிலிருந்து தனது நிலத்தை மீட்பதற்காக கரூரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்ற பைனான்சியரிடம் 30 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அந்த கடன் தொகைக்கு அடமானமாக நிலத்தை அவர் கேட்டதையடுத்து அதற்கு ஒத்துக்கொண்ட வெள்ளியங்கிரி மற்றும் அவரது மகன், மகள்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று அடமான பத்திரம் என நினைத்து கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளனர்.

மேலும் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த வெள்ளிங்கிரி குடும்பத்தினர் அதில் சோளம் பயிரிட்டிருந்த சூழலில் நேற்று பிற்பகல் அங்கு சென்ற ஈஸ்வரமூர்த்தியின் மகனான அபிஷேக் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் அந்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர். அப்போது தங்களது நிலத்தில் கம்பி வேலி அமைக்க நீங்கள் யார் என வெள்ளிங்கிரி குடும்பத்தினர் கேட்கவே அவர்களை அச்சுறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்திய அந்த கும்பல் அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளம் பயிர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அழிக்க துவங்கியுள்ளனர். இதனையடுத்து வெள்ளிங்கிரி, அவரது மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர் வழக்கறிஞருடன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அப்போது பேசிய வழக்கறிஞர் பூர்ணிமா, அடமானம் என்ற பெயரிலேயே பத்திரப்பதிவு செய்வதற்காக படிப்பறிவு இல்லாத வெள்ளிங்கிரி, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மகள்களை அழைத்துக் கொண்டு ஈஸ்வரமூர்த்தி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றதாகவும் பதிவு அலுவலகத்திலும் கிரயம் என்று கூறாமலேயே பத்திரப்பதிவு செய்து அவர்களை மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டாக இது குறித்து எந்த தகவலும் அறியாமல் இருந்த வெள்ளிங்கிரி மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்டோர் வந்து தங்களது நிலம் என்று கூறும் பொழுது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஈஸ்வரமூர்த்தி பிரபல அரசியல் கட்சியில் இருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்ட அவர், தாங்கள் இது தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்த போது காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியதாகவும், அதன் அடிப்படையில் வெள்ளிங்கிரியின் மருமகள் மற்றும் மகன்கள் உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு சென்ற நேரத்தில் முழுவதுமாக கம்பி வேலி அமைத்த ஈஸ்வரமூர்த்தியின்  ஆட்கள் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தற்போது கையகப்படுத்தி இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

மேலும் 30 லட்சம் ரூபாய் கடனுக்காக 4 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை மோசடியாக அபகரித்தவுடன் அங்கு பயிரிடப்பட்டிருந்த சோள பயிர்களையும் ஜேசிபி மூலம் அழித்த ஈஸ்வரமூர்த்தி அவரது மகன் அபிஷேக் மற்றும் அராஜகத்தில் ஈடுபட்ட அடியாட்கள் 10 பேர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தனது நிலத்தை ஏமாற்றி அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 98 வயது முதியவர் கையில் தடி ஊன்றிய படி ஆட்டோவில் வந்து இறங்கி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button