தொடர்மழையால் களையிழந்த ஆட்டுச் சந்தை ! வரத்து அதிகரிப்பால் அடியோடு சரிந்த ஆடுகள் விலை !

தீபாவளியை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை அடியோடு சரிந்ததுடன் தொடர் மழை காரணமாக ஆட்டுச் சந்தை களை இழந்து காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரம்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும். சிவகங்கை, நரிக்குடி, வீரசோழன், அபிராமம், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்களது கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். தீபாவளியை முன்னிட்டு பரமக்குடியில் கால்நடைச் சந்தை நடைபெற்றது.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. 5 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வர வேண்டிய இடத்தில் 12 ஆயிரம் ஆடுகள் வந்திருந்ததால் ஆடுகளின் விலை அடியோடு சரிந்துள்ளது. அதேபோல் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதுகுறித்து வியாபாரி அஜித்குமார் கூறுகையில்…
தீபாவளி வார சந்தையில் விற்பனை செய்வதற்காக 10 ஆடுகளைக் கொண்டு வந்துள்ளேன். ஒவ்வொரு கிராமத்திலும் 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விலை கொடுத்து ஆடுகளை வாங்கி உள்ளேன். ஆனால் சந்தையில் ரூபாய் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மட்டுமே விலை கேட்கின்றனர். இதனால் ஆடுகளின் விலை சரிந்து காணப்படுகிறது. அதேபோல் ஒரே சமயத்தில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதால் விலை குறைந்துள்ளது, விற்பனையும் சரிந்து உள்ளது என கூறினார்.

10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் வரத்து அதிகரிப்பால் தற்போது 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பரமக்குடி வார சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் விலை அடியோடு சரிந்தது. இதனால் வியாபாரிகள் ஆடுகளை விற்காமல் மீண்டும் கொண்டு சென்றதால் விற்பனை மந்த நிலையில் இருந்தது.




