சூழலியல் போராளி முகிலன் எங்கே?
தமிழகத்தின் மண்ணுரிமைப் போராட்டக்களத்தில் முதன்மையாய் நிற்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனைக் காணவில்லையென வெளிவந்துக் கொண்டிருக்கும் செய்தியானது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.
கடந்த பிப்ரவரி 15 அன்று சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்றவருக்கு அதன்பிறகு என்ன நிகழ்ந்தது என்கிற எந்த விபரமும் இந்நொடிவரை தெரியவில்லை. தாமதப்படுத்தப்படும் ஒவ்வொரு மணித்துளியினாலும் அவருக்கு எதுவேனும் நிகழ்ந்திருக்குமோ? என்கிற பதைபதைப்பும், பதற்றமும் தொற்றிக்கொள்வதைத் நம்மால் தவிர்க்க முடியவில்லை. சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டிருக்கிறார் என்றும், தலைமறைவாக இருக்கிறார் என்றும் பல்வேறு விதமாக முன்வைக்கப்படும் அனுமானங்களினாலும், யூகங்களினாலும் அவரது குடும்பத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கும், பரிதவிப்பு நிலைக்கும் ஆளாகியுள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல்துறையின் மூலம் தமிழக அரசு நிகழ்த்திய வன்முறை வெறியாட்டத்தினையும், படுகொலையினையும் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அம்பலப்படுத்தியப் பிறகு அவர் காணாமல் போயிருப்பது பல்வேறு ஐயங்களைத் தோற்றுவிக்கிறது. சென்றமுறை கைது செய்யப்பட்ட பொழுது திட்டமிட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார் என்பதை பார்க்கும் பொழுது இந்த முறையும் திட்டமிட்டு அவரது செயல்பாடுகளை தடுக்கும் நோக்கோடு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தன்னலமற்று மண்ணுரிமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற சூழலியல் செயற்பாட்டாளர் முகிலனின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியதும், அவருக்கு என்ன ஆனது? அவர் எங்கே இருக்கிறார்? என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகிறது. எனவே, இவ்விவகாரத்தில் உடனடியாக சீரியக் கவனமெடுத்து அவரைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 15-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவணங்களை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார் சமூக செயற்பாட்டாளர் முகிலன்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தவர் ஊர் சென்றடையவில்லை எனவும் காணாமல் போனதாகவும் கடந்த 18-ம் தேதி சென்னை எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் லயோலா மணி என்பவர் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எழும்பூர் ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறி பல்வேறு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இதனையடுத்து முகிலன் காணாமல் போன வழக்கை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடுவதாக தமிழக காவல் துறை இயக்குனர் டிகே ராஜேந்திரன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அந்த உத்தரவின் பேரில் சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையிலான குழு இன்று முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர், ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அவர்கள் இதுதொடர்பாக கைப்பற்றிய சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றுக்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார் முகிலன் ரயில் நிலையத்திற்கு வெளியே செல்வதும் ரயிலில் பயணிக்காததும் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் முதற்கட்டமாக முகிலனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அவரது செல்போன் சிக்னல் எந்த பகுதியில் துண்டிக்கப்பட்டது அதை சுற்றியுள்ள பகுதிகளில் முகிலனுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ற அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
முகிலனின் மனைவி பூங்கொடியோ, “அரசும் ஸ்டெர்லைட் நிறுவனத்தினரும்தான் என் கணவரை ஏதோ செஞ்சிருக்காங்க. ஆனால், சில பேர் என் கணவர் சொந்தப்பிரச்னை காரணமாக தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். சிலர் என் கணவருடன் வேலை பார்த்துக்கொண்டே, ஆலை நிர்வாகத்திடமிருந்து பணம்பெற்றுக்கொண்டு அவருக்கு எதிரா செயல்படுறாங்க. இதை என்னால ஆணித்தரமாக சொல்லமுடியும். சொந்தப் பிரச்னைக்காக ஓடி ஒளிகிற கோழை என் கணவர் அல்ல” என்றார்.