தமிழகம்

போக்குவரத்து விதிமீறல்..! : அபராதத் தொகை பத்து மடங்கு அதிகரிப்பு!

மோட்டார் வாகனச் சட்டம் கலாவதிகாவிட்டது. அதை மத்திய அரசு தற்போது புத்துப்பித்துள்ளது. அதன்படி, மத்திய சாலைப் போக்குவரத்துதுறை அமைச்சகம் மோட்டார் வாகன திருத்த மசோதாவை பரிந்துரை செய்தது. அதில், போக்குவரத்து விதிகளை மீறி நடப்பவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை, நடப்பு நிலையில் இருந்து பத்து மடங்காக உயர்த்தும் பரிந்துரை இடம்பெற்றிருந்தது.


கடந்த மக்களவை கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால் மாநிலங்களவையில் ஒப்புதல் பெறாத காரணத்தினால், இது நிலுவையில் இருந்து வந்தது. தற்போது மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, இந்த மோட்டார் வாகன திருத்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகளை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில், மோட்டார் வாகன மசோதாவில் விதிமுறைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், போக்குவரத்து விதிகளை மீறி நடப்பவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.


ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அபாயகரமான வகையில் வாகனம் ஓட்டுதல், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறில்களுக்கான அபராதத் தொகை உச்சப்பட்ச அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.


அவசர ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடமால் வாகனங்களை ஓட்டிச் சென்றால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்றால் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை அபராதம் விதிக்கப்படும். காப்பீடு காலம் கலாவதியாகி இருந்தால் ரூ. 2,000 அபராதம் செலுத்த வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 1,000 அபராதம் வசூலிக்கப்படும், மேலும் 3 மாதங்களுக்கு சம்மந்தப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
சிறுவனர்கள் கார், பைக், ஸ்கூட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படும். மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்வதோடு, இந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.


போக்குவரத்து சிக்னலை மீறி செயல்படும் குற்றத்திற்காக தற்போது ரூ. 100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினரின் கட்டளைக்கு இணங்காமல் செல்பவர்களிடம் தற்போது ரூ. 500 வசூலிக்கப்படுகிறது. இதற்கான அபராதத் தொகை ரூ. 2,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல அங்கீகரிக்கப்படாத வாகனங்களை ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும். முன்னதக, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுபவரிடம் ரூ. 1000 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த தொகை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் தற்போது ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த குற்றத்திற்காக ரூ. 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்ரிகேட்டர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.
மேலும், அதிகளவிலான லோடிங் செய்து வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படவுள்ளது. கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், இந்த குற்றத்திற்காக சம்மந்தப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் ஓட்டுநர் பயிற்சி முறையும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு யாராவது உதவினால், அவர்களுக்கு எந்தவொரு பிரச்னையும் ஏற்படாத வகையில் வழக்கை நகர்த்திட மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


போக்குவரத்து விதிகளை மீறினால் பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல், அதிகாரிகளும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அதன்படி, மேற்கூறிய விதிகளை காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் மீறும் பட்சத்தில் அவர்களிடம் இரு மடங்காக அபராதம் வசூலிக்கப்படும்.
மோட்டார் வாகன மசோதாவில் செய்யப்பட்டுள்ள இந்த திருத்தம், சாலை போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும், அதிகப்பட்ச அபராதத் தொகையை காரணம் காட்டி சில போலீசார் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் புதிய போக்குவரத்து விதிகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் நாம் கற்று உணர்ந்துக் கொள்வது முக்கியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button