“தூக்குதுரை” படத்தின் திரைவிமர்சனம்
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், அன்பு, வினோத், அரவிந்த் தயாரிப்பில், மஞ்சுநாத் இயக்கத்தில், யோகி பாபு, இனியா, மாரிமுத்து, சென்றாயன், அஸ்வின், மகேஷ், பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “தூக்குதுரை”.
கதைப்படி… கைலாசம் என்கிற கிராமத்தில் அரச குடும்பத்தின் வாரிசான மாரிமுத்து அந்த கிராமத்தின் தலைவராக இருக்கிறார். வருடந்தோறும் நடைபெறும் கோவில் திருவிழாவில் இவருக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. அப்போது இவரது தம்பி நமோ நாராயணாவும் அருகில் இருக்கிறார். அப்போது இவர்களது குடும்பத்திற்குச் சொந்தமான விலையுயர்ந்த அரசர் காலத்து கிரீடத்தை சிலையின் முன்பாக வைத்து பூஜை செய்து மாரிமுத்து தனது வீட்டில் வைத்து பாதுகாத்து வருகிறார்.
கோவில் திருவிழாவில் திரைப்படம் ஒளிபரப்ப வரும் யோகி பாபுவும், மாரிமுத்து வின் மகள் இனியாவும் காதலிக்கின்றனர். திருவிழா நடைபெறும் சமயத்தில் காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடுகின்றனர். ஊர் தலைவரின் மகள் என்பதால் அவரது ஆட்கள் இருவரையும் பிடித்து மாரிமுத்துவிடம் ஒப்படைக்க, யோகி பாபுவை கொலைசெய்து கிணற்றில் தள்ளி தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இனியாவை வெளியூர் அனுப்பி வைக்கிறார் அவரது தந்தை மாரிமுத்து.
நகர் பகுதியில் சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்த மகேஷ், சென்றாயன், பால சரவணன் ஆகிய மூவரும் விலையுயர்ந்த கிரீடத்தை திருடி வாழ்க்கையில் நிம்மதியாக வாழலாம் என்கிற எண்ணத்தில் கைலாசம் கிராமத்திற்கு வருகின்றனர். இவர்களது பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு கிரீடம் யோகி பாபுவை எரித்த கிணற்றில் இருப்பதாகவும், யோகி பாபு பேயாக வந்து ஊரையே மிரட்டுவதாகவும் இவர்களுக்கு தெரியவருகிறது.
இதற்கிடையில் கிரீடம் தனது வீட்டில்தான் இருக்க வேண்டும் என நமோ நாராயணா, தனது மகன் அஸ்வினுடன் முயற்சிக்கிறார். அஸ்வின் திருட வந்த மூவருடன் பயணிக்கிறார்.
அரசர் காலத்து கிரீடத்தை பேய் தங்கியிருக்கும் கிணற்றிலிருந்து திருடினார்களா ? உண்மையிலேயே கிரீடம் யாரிடம் இருக்கிறது ? வெளியூர் சென்ற இனியா என்ன ஆனார் என்பது மீதிக்கதை…
படத்தில் காமெடி நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தாலும், ரசித்து சிரிக்கும் படியான காட்சிகள் எதுவும் இல்லை. தொலைக்காட்சி தொடர்களே ஆக்ஷன், த்ரில்லர் காட்சிகளுடன் நகரும் இக்காலத்தில், படம் முழுவதையும் வசனங்களுடன் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
குடும்பத்தோடு தியேட்டருக்கு வருபவர்கள், ஆபாச காட்சிகள் இல்லாததால் சற்று ஆறுதல் அடையலாம். மற்றபடி நல்ல கதையம்சம் கொண்ட படத்தை கொடுக்க வேண்டும் என இயக்குநர் முயற்சித்துள்ளார்.