விமர்சனம்

பாலியல் குற்றத்திற்குத் தீர்வு.. தண்டனையா ? விபச்சார அங்கீகாரமா ? வி-3 திரைவிமர்சனம்

வரலெட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பாவனா நடிப்பில், தமிழ் வாணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வி 3”.

கதைப்படி… தினசரி பத்திரிகையை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பணியை செய்து வரும் வேலாயுதம் ( ஆடுகளம் நரேன் ), விந்தியா ( பாவனா ), விஜி ( எஸ்தர் ) என இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். விந்தியா தேர்வு எழுதிவிட்டு இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புகையில், வாகனம் பழுதாகி நின்றுவிடுகிறது. விந்தியா வாகனத்தை சரிசெய்ய முயற்சிக்கிறார்.

விந்தியா வீடு திரும்பாததால் அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் செய்கிறார். மறுநாள் காலையில் ஒரு இளம்பெண் தீயிட்டு எறிந்த நிலையில் உடல் கருகிய நிலையில் ஒரு பெண் சடலம் இருப்பதாகவும், அது உங்கள் மகளின் சடலாமா என அடையாளம் காண வருமாறு காவலர் ஒருவர் அலைபேசியில் வேலாயுதத்தை அழைக்கிறார். அவர் தனது இரண்டாவது மகள் விஜி யுடன் சென்று பார்க்கையில் விந்தியா அணிந்திருந்த கடிகாரத்தை காண்பித்ததும் தனது மகள் விந்தியா தான் என கதறி அழுகிறார் வேலாயுதம்.

அதன்பிறகு இந்த விஷயம் தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாக பரவி பிரச்சினையாகிறது. பின்னர் குற்றவாளிகளான ஐந்து இளைஞர்களை காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுவிட்டதாக கூறுகின்றனர். இந்தப் பிரச்சினையை மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, விசாரணை அதிகாரியாக சிவகாமி ஐஏஎஸ் ( வரலெட்சுமி சரத்குமார் ) நியமிக்கப் படுகிறார். சிவகாமி ஐஏஎஸ் விசாரணை செய்யக் கூடாது என இறந்தவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தான் குற்றவாளிகளா ? அல்லது வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா ? மனித உரிமை ஆணைய விசாரணை அறிக்கையில், உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண்பித்தாரா சிவகாமி ஐஏஎஸ் ? என்பது மீதிக்கதை….

ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ள வரலெட்சுமி சரத்குமார் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார். கலெக்டர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

மகளை இழந்த தந்தையின் வேதனையை வெளிப்படுத்துகிற போதும், மகளைப் பார்த்து கதறி அழும்போதும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி காண்பவர்களை கண்கலங்க வைக்கிறார் ஆடுகளம் நரேன்.

பாவனாவின் நடிப்பு பிரமாதம் என்றே சொல்லலாம். கற்பழிப்பு காட்சியின் போதும், தப்பித்து ஒழிந்து கொள்ளும் காட்சியின் போதும் வார்த்தை உச்சரிப்பிலும், முக பாவனையிலும் எதார்த்தமான நடிப்பை உணரமுடிகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை தீர்வாகாது, செக்ஸ கல்வியை கொண்டுவர வேண்டும், விபச்சாரத்திற்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, விவாதத்திற்கு உள்ளாக்க முயன்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button