தமிழகம்

திருப்பூரில் 2023 ஆம் ஆண்டு அதிரடி காட்டிய மாநகர காவல்துறை

திருப்பூர் மாநகரத்தில் 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் 2 போக்குவரத்து காவல் நிலையங்களில் 2023 ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகள், ஆதாய கொலை வழக்குகள், வழிப்பறி வழக்குகள், திருட்டு வழக்குகள், அடிதடி வழக்குகள், போன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, லாட்டரி விற்பனைகள், சூதாட்டம் போன்ற குற்றங்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் காவல்துறையின் பணிகளை நவீனப்படுத்தும் விதமாகவும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் அபிஷேக் குப்தா, காவல் துணை ஆணையர் (வடக்கு), திருமதி.சு.வனிதா, காவல் துணை ஆணையர் (தெற்கு) அவர்களின் மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாநகரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை தமிழ் தொழிலாளர்கள் தாக்குவதாக சமூக வலைதளங்களில் வதந்திக்களாக பரப்பப்பட்டன. இதனால் பதற்றமான சூழல் நிலவியது. இதனை சாதூரியமான முறையில் கையாண்டு தவறான வதந்திகளை பரப்பியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருப்பூர் மாநகர காவல் ஆளினர்கள் முதல் காவல் ஆணையர் வரை அனைவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு நேரில் சென்று தவறான வதந்திகள் பரவுவது குறித்து தெளிவான முறையில் எடுத்து கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அசாதாரண நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருப்பூர் மாநகரத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்தது மட்டுமின்றி நீதிமன்றத்தின் மூலமாக அவர்களுக்கு தண்டைகளை பெற்று தந்து அவர்களை நிரந்தரமாக சிறையில் அடைக்க தனிக்கவனம் செலுத்தி சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக 24 வழக்குகளில் 41 எதிரிகளுக்கு வழக்கு பதிவுசெய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் வழக்கு விசாரணைகளை முடித்து நீதிமன்றத்தின் மூலமாக 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் கடந்த 2022-ம் ஆண்டில் 2540 வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனைகள் பெற்று தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 3142 வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனைகள் பெற்று தரப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரத்தில் கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் 11091 வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வந்தது. இந்த ஆண்டு 4845 வழக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் மாநகர காவல்துறை சார்பாக “No Helmet! No Key!” மற்றும் “2 (Wheeler – Heads – Lives – Helmets)” போன்ற பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தி வாகன விபத்துகளும், உயிர் சேதங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் வாகன விபத்துகளில் 159 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டில் வாகன விபத்துகளில் 142 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 17 உயிரிழப்புகள் (10%) குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலை போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு 3 இடங்களில் புதிதாக போக்குவரத்து சமிக்கைகள் நிறுவப்பட்டுள்ளனன. குறிப்பாக அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் புஷ்பா ஜங்ஷனில் சமிக்கைகள் இல்லாமல் ஒருவழி பாதை போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டு நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரத்தில் கொலை சம்பவங்கள், கொள்ளை சம்பவங்கள், வழிப்பறி சம்பவங்கள், கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை போன்றவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பொதுமக்களுக்கும், பொதுசொத்துகளுக்கும் அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டு வந்த 76 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 2022-ம் ஆண்டில் 78 நபர்களும், 2021-ம் ஆண்டில் 59 நபர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகரத்தில் இந்த ஆண்டில் 22 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த ஒரு கொலை வழக்கும், 2022-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த ஒரு ஆதாய கொலை வழக்கும் இந்த ஆண்டு சீரிய முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 10 கொலை வழக்குகளில் நீதிமன்ற விசாரணை முடித்து எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 247 கொள்ளை, திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 216 (87%) வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவு பாதுக்காப்பு துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பள்ளி மற்றும் கல்விக்கூடங்களுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 102 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்தவர்கள் மீது 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 262 எதிரிகள் கைது செய்யப்பட்டு, ரூ.1,71,208/- பணமும் மற்றும் 14 இரு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டது. இந்த ஆண்டில் சட்டவிரோதமாக சூதாடிய 641 நபர்கள் மீது 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.8,37,690/- பணமும் மற்றும் 20 இரு சக்கர வாகனங்களும், ஒரு நான்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது. இந்த ஆண்டில் சட்டவிரோத மது விற்பனை செய்ததாக 2430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 2437 எதிரிகளை கைது செய்தும், 3401.170 Ltrs மதுபானங்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது. இந்த ஆண்டில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியதாக 2,01,627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.12,31,74,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button