கதாநாயகனுக்கு எய்ட்ஸ் !.? அதிர்ந்த உதவியாளர் ! “ஜப்பான்” படத்தின் திரைவிமர்சனம்
டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி, அனு இமானுவேல், கேஎஸ் ரவிக்குமார், பவா செல்லத்துரை உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில், ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஜப்பான்”.
கதைப்படி… கோவையில் நகைக்கடை ஒன்றில் இரு நூறு கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போகிறது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, இரவு நேரங்களில் நகைப் பட்டரை கால்வாய்களில் மண்ணை எடுத்து அலசி அதிலுள்ள தங்கத்தின் துகள்களை சேகரித்து குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வாழ்க்கை நடத்திவரும் மக்கள் வசிக்கும் பகுதியில் காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர். அப்போது குப்பையில் ஒரு தங்கக்காசு கிடைக்கிறது.
அதைவைத்து இந்த சம்பவத்தை ஜப்பான் ( கார்த்தி ) தான் செய்துள்ளார் என காவல்துறையினர் முடிவு செய்கிறார்கள். ஜப்பான் சினிமா தயாரித்து நாயகனாகவும் நடித்து நாடுமுழுவதும் அறியப்பட நபராக ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார். அவரை பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீஸ் தேடுகிறது. இதற்கிடையில் மருத்துவமனையில் கொடுத்த இரத்த பரிசோதனை முடிவுகளை அறிவதற்காக மருத்துவரை சந்திக்கிறார். பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பதை மருத்துவர் உறுதி செய்ய, வேதனையில் தனது ஓட்டுனரிடம் புலம்புகிறார்.
நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஜப்பானை கைதுசெய்து நகைகள் திரும்பப் பெறபட்டதா ? எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஜப்பான் என்ன ஆனார் என்பது மீதிக்கதை…
கார்த்தியின் இளமை காலத்தை ஃபிளாஷ் பேக்கில் இயக்குனர் கூறிய விதம் அருமை. குறிப்பாக இறுதி காட்சியில் அவரது தாயாரின் வைராக்கியத்தை உணர்ந்து ஜப்பான் எடுக்கும் முடிவு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும்.
கார்த்தி முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, தனது திறமையை நிரூபித்திருக்கிறார் என்றே சொல்லலாம். இன்றைய அரசியல் சூழ்நிலையை கார்த்தி வசனங்களாக பேசும் விதம் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.
படத்தில் வாகை சந்திரசேகர், கேஎஸ் ரவிக்குமார், பவா செல்லத்துரை உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.