“காடுவெட்டி” மூலம் நடிகனாக அறிமுகமாகியுள்ள களஞ்சியத்தேவர் மகன் ஆர்.கே. சுரேஷ் !
மஞ்சள் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ், கே. மகேந்திரன், என். மகேந்திரன், சி. பரமசிவம் ஆகியோரோடு சோலை ஆறுமுகம் இணைந்து தயாரித்து இயக்கியுள்ள படம் “காடுவெட்டி” இப்படத்தில் ஆர். கே. சுரேஷ், சங்கீர்த்தனா, விஷ்மியா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, அகிலன், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கதைப்படி.. உயர்ந்த சமுதாயத்தைச் சேர்ந்த தாட்சாயினியை ( சங்கீர்த்தனா ), ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அகிலன், தனது காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து, தாட்சாயினியை சம்மதிக்க வைத்து காதலைத் தொடர்கிறான். பின்னர் இருவரும் பைக்கில் வருவதைப் பார்த்த இளைஞர்கள் இருவரையும் அடித்து உதைக்க, அகிலன் தப்பித்து ஓடி விடுகிறான். தாட்சாயினி கடுமையான தாக்குதலுக்கு ஆளானதால், மயக்கமடைந்த நிலையில் அவளை ஊருக்குள் தூக்கி வர, விஷயம் கேள்விப்பட்டதும் ஊரில் உள்ள பெண்கள் அவள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
அதன்பிறகு ஊர் பஞ்சாயத்து கூடுகிறது. அந்த பஞ்சாயத்துக்கு பெண்ணின் தந்தை ராஜமாணிக்கம் ( சுப்ரமணிய சிவா ), விஷயம் எதுவும் தெரியாததால் தாமதமாக வருகிறார். ஊரின் கௌரவத்தையும், சமுதாயத்தின் மானத்தையும் சீரழிக்கும் வகையில் உனது மகள் நடந்து கொண்டதால், அந்தப் பெண் உயிரோடு இருந்தால் ஊருக்குத் தான் அவமானம். ஆகையால் ஊரும், ஜாதிசனமும் முக்கியமென்றால், பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு உனது மகளை இரவோடு இரவாக நீயே கொன்றுவிடு என கூறுகிறார்கள்.
பின்னர் ராஜமாணிக்கம் வீட்டிற்கு வந்ததும் வீட்டின் சூழ்நிலை கருதி அமைதியாக யோசிக்கையில், எனக்கு அவன்தான் வேண்டும், அவன் இல்லாவிட்டால் நான் செத்துடுவேன், என்னை அவனோடு வாழவிடுங்கள் அல்லது நீங்களே கொன்று விடுங்கள் என தாட்சாயினி தீர்க்கமாக பேசுவதைக் கேட்டதும், ராஜமாணிக்கம் மகளுக்கு பிடித்தமான கோழிக்கறி சமைத்து, அதில் விஷம் கலந்து மகளுக்கு கொடுக்கிறார். அவளும் வேகமாக சாப்பிடுகிறார்.
இதற்கிடையில், குரு ( ஆர்.கே. சுரேஷ் ) தனது சமுதாயத்திற்கு அவமானம் ஏற்படும் வகையில் தன் ஜாதிப் பெண்களை எவன் சீண்டினாலும் அடித்து துவம்சம் செய்து பெண்களை காப்பாற்றுகிறார். அதேபோல் போதைப் பழக்கத்தை ஒழிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து, அரசியல் கட்சி தலைவர் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். பின்னர் சமுதாயத்தின் காவலர் மாவீரன் என அழைக்கப்படுகிறார்.
பின்னர் தாட்சாயினி என்ன ஆனார் ? அதன்பிறகு ராஜமாணிக்கத்தின் குடும்பம் என்னானது ? இந்த சம்பவத்தில் குருவின் நிலைப்பாடு என்ன என்பது மீதிக்கதை…
நீண்ட நாட்களுக்குப் பிறகு “காடுவெட்டி” மூலம் ஆர்.கே. சுரேஷ் திரையில் தோன்றினாலும், அவரது ஒவ்வொரு அசைவுகளும் இறந்துபோன காடுவெட்டி குருவின் நினைவலைகளை நம் கண்முன்னே நிறுத்துகிறது. இது உண்மையான காடுவெட்டி குருவை நன்கு அறிந்தவர்களுக்கு புரியும்.
இந்தப் படத்தின் மூலம் ஆர்.கே. சுரேஷ் நல்ல நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இதுவரை ஏதோ ஒரு வகையில் பணம் செலவு செய்துதான் நடித்து வந்தார். இந்தப் படத்தின் மூலம்தான் உண்மையான நடிகனாக தனது திறமைகளை வெளிக்காட்டி உள்ளார். தென் மாவட்டத்தில் அரசியலிலும், சமுதாயத் தலைவர்கள் மத்தியிலும் பிரபலமானவர் களஞ்சியத்தேவர். அவரது மகன் என்பதாலோ என்னவோ காடுவெட்டி குருவின் கதாப்பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் குணச்சித்திர வேடங்களில் பல்வேறு பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த காலஞ்சென்ற இயக்குநர் மணிவண்ணன் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் வகையில், இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.