பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -: முதல்வர் ஸ்டாலின்
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், “6 பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, தமிழ்நாட்டை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இடையிடையே கொள்கையற்ற அ.தி.மு.க கூட்டம் தமிழ்நாட்டை சீரழித்தது.
அதையும் சரிசெய்து அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு மாநில அரசை நடத்துவற்கு வரி வருவாய்தான் முக்கியம். அந்த வரி வருவாயை கபளீகரம் செய்வதன் மூலமாக, மாநில அரசை செயல்படவிடாமல் முடக்குக்கிறார்கள்.
அதேபோல, கல்வியும் மிகமிக முக்கியமானது. மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை என்ற பெயர்களில் நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியையும் தடுக்கப் பார்க்கிறார்கள். மருத்துவம் படிக்க நினைக்கின்ற மாணவர்களின் கனவை சிதைக்கும் நோக்கத்தில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டிருகிறது.
லட்சக்கணக்கான ரூபாய் செலவுசெய்தால்தான் தேர்ச்சிபெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். சில தனியார் சென்டர்களின் லாபத்துக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டைப் போன்றே வடமாநிலங்களிலும் நீட் தேர்வு தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன.
ஒரு மீம்ஸ் பார்த்தேன். ‘எங்கள் முதல்வர் சொன்ன ஆயிரம் ரூபாய் வந்துருச்சி. பிரதமர் சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு?’ என்று ஒரு தாய்மார் கேட்கிறார். சிலிண்டர் விலையை மூன்று மடங்கு உயர்த்தியது மட்டுமே மோடியின் 9 ஆண்டுக்கால சாதனை. இப்போது தேர்தல் வருவதால் 200 ரூபாய் குறைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். அதேபோல, 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது பா.ஜ.க அரசு. பணவீக்கம் அதிகமாகியிருக்கிறது.
பா.ஜ.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கின்றனர். பா.ஜ.க ஆட்சியின் ஊழல் முகத்தை பொதுமக்களிடம் அம்பலப்படுத்தியாக வேண்டும். புதுவை உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நம் கூட்டணிதான் வெற்றிபெறும். தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இந்தியா முழுக்க வெற்றிபெற வேண்டும். அதற்காகத்தான் ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம்.
இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை நம்மால் உருவாக்க முடியும். இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெற்றிபெற செய்வது நமது அரசியல் கடமை. நாற்பதுக்கு நாற்பது என்பதே நமது இலக்கு என உறுதியேற்போம்” என்றார். இந்த விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.