மாணவர்கள் இல்லாத விடுதியில், உணவு பறிமாறுவதாக கணக்கு காட்டும் விடுதி காப்பாளர் !

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட மல்லபுரம் கல்லுப்பட்டியில் இயங்கி வரும் அரசு மாணவர் விடுதி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் வெளியூரிலிருந்து தங்கி படித்து வந்தனர். ஆனால் தற்போது மூன்று ஆண்டுகளாக எந்த மாணவர்களும் தங்கவில்லை. ஆனால் இங்குள்ள காப்பாளர் இங்கு சுமார் முப்பது மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருவதாக கணக்கு காட்டி, மாணவர்களின் உணவு தேவைகளுக்காக வரும் பொருட்களை கையாளுகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் விடுதி செயல்படவில்லை, விடுதியின் காப்பாளர் இங்கு வருவதே இல்லை. அவ்வப்போது சமையல்காரர் மட்டும்தான் வருகிறார். அவரும் என்றாவது ஒரு நாள் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை அழைத்து மதிய சாப்பாடு பரிமாறுகிறார்.

இதுகுறித்து காப்பாளரிடம் கேட்டபோது, சிஒ ஆபிசில் நான் பேசி விட்டேன், அவர்களுக்கு தெரிந்து தான் இதெல்லாம் நடக்கிறது என்றும் கூறுகிறார். இது சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் விடுதிக் காப்பாளரை விசாரணை செய்து, வெளியூரில் இருந்து வரும் மாணவர்களை தங்கி படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் இதில் எந்தெந்த அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது, காப்பாளரின் செயலுக்கு யார்யார் துணை போகிறார்கள் என்பதையும் விரிவாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.